×

கடந்த 2 வாரங்களில் சீனா சென்ற வெளிநாட்டினர் இந்தியா வருவதற்கு தடை: விசாவையும் ரத்து செய்தது மத்திய அரசு

பிஜீங்: கடந்த 2 வாரங்களில் சீனா சென்ற சீனர்கள் மற்றும் வெளிநாட்டினரின் விசாக்களை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. நாள்தோறும் பலர் உயிரிழந்து வருகின்றனர். வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான மருந்து இல்லாததால் செய்வதறியாது மருத்துவர்களும் திணறி வருகின்றனர். இதன் காரணமாக தினந்தோறும் உயிரிழப்புக்களும், புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் 425 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 64 பேர் இறந்துள்ளனர். மேலும், வைரஸ் தாக்கியதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,438 ஆக அதிகரித்துள்ளது.

இதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் இந்தியா உட்பட 25 நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது. சீனாவில் இருந்து சொந்த நாடு திரும்பியவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது மருத்துவ பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து சர்வதேச மருத்துவ அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு பிரகடனம் செய்துள்ளது. இந்தியாவில் கேரள மாநிலத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் 3 பேரும் வுகானில் இருந்து திரும்பி வந்தவர்கள்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்கும் வகையில், கடந்த 2ம் தேதி சீனர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கான இ- விசாக்களை தற்காலிகமாக மத்திய அரசு தடை செய்தது. தற்போது இந்தியாவில் இருந்து கடந்த இரண்டு வாரங்களில் சீனாவுக்கு சென்ற வெளிநாட்டினர்களுக்கான விசாவை மத்திய அரசு தடை ெசய்து உத்தரவிட்டுள்ளது. இதேபோல், சீனர்களின் இந்திய வருகையும் தடை செய்யப்பட்டுள்ளது.

 ஏற்கனவே இந்தியாவில் இருப்பவர்கள் மற்றும் கடந்த ஜனவரி 15ம் தேதிக்கு பின்னர் இந்தியாவிற்கு வந்தவர்கள் நேரடியாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான பிரத்யேக எண் +91-11-23978046, இமெயில் ncov2019@gmail.com அணுகுமாறு இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.  கட்டாய காரணங்களால் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு பயணம் செய்ய வேண்டியவர்கள் பீஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அல்லது குவாங்ஷூவில் உள்ள துணை தூதரகத்தை அணுகுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது சீனாவில் இருந்து 647 இந்தியர்கள் மற்றும் 7 மாலத்தீவு நாட்டை சேர்ந்தவர்கள் வுகான் நகரில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக டெல்லி அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு மனேசாரில் உள்ள பிரத்யகே மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. 14 நாட்கள் கண்காணிப்புக்கு பிறகு இவர்கள் முகாமில் இருந்து அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும்.

கப்பல் நிறுத்திவைப்பு
ஜப்பானில் ஹாங்காங்கில் இருந்து ஏற்கனவே வந்த கப்பலில் பயணித்த 80வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை ெதாடர்ந்து நேற்று முன்தினம் மாலை யோகோஹாமாவுக்கு 3711 பயணிகளுடன் வந்த கப்பல் தனிமைப்படுத்தப்பட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள 2666 பயணிகள், 1045 ஊழியர்கள் என அனைவரும் மருத்துவ சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நாஹா துறைமுகத்தில் கடந்த சனியன்று அவர்களுக்கு முதல் பரிசோதனை முடிந்துவிட்டது. ஆனால் இரண்டாவது மருத்துவ பரிசோதனைக்காக நேற்று முன்தினம் மாலை முதலில் கப்பலில் வந்த பயணிகள் காத்துள்ளனர்.

மக்கள் வெளியே செல்ல கட்டுப்பாடு
சீனாவின் வுகானில் கொரோனா வைரஸ் அதிவேகத்தில் பரவுவதை அடுத்து ஹூபெய் மாகாணத்தில் இருந்து 850கி.மீ. தொலைவில் உள்ள கிழக்கு மாகாணமான ஜிசியாங்கில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள தாய்சோ மற்றும் 3 ஹாங்கோ மாவட்டங்களில் மக்கள் நடமாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு வீட்டுக்கு ஒருவர் மட்டுமே இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வீட்டை விட்டு வெளியே சென்று அத்தியாவசிய பொருட்களை வாங்கி வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்ெவாரு முறையும் அடையாள அட்டையை காண்பித்தால் மட்டுமே வெளியே செல்ல முடியும்.

ஹாங்காங்கில் ஒருவர் பலி
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஹாங்காங்கின் இரண்டு எல்லைகளையும் மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் 15பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே  கடந்த மாதம் சீனாவின் வுகான் நகருக்கு சென்று கடந்த 23ம் தேதி அங்கிருந்து ஹாங்காங் திரும்பிய 39 வயது நபருக்கு மருத்துவ பரிசோதனையில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.

புதிதாக 3,235  பேருக்கு கொரோனா
சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பில் நேற்று முன்தினம் மட்டும் 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், புதிதாக 3,235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5,072 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது. சிகிச்சை முடிந்து 632 பேர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். 492 பேர் மிகவும் மோசமாக நிலையில் உள்ளனர். 2,788 பேரின் நிலை தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருக்கிறது.

8 முதல் டெல்லி-ஹாங்காங் விமானம் ரத்து
கொரோனா வைரசால் ஹாங்காங்கில் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வைரஸ் தாக்கத்தால் நேற்று ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருகிற 8ம் தேதி முதல் டெல்லியில் இருந்து ஹாங்காங்கிற்கு ஏர்இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஏர் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அஸ்வினி லோகானி கூறுகையில், “ கொரோனா வைரஸ் பரவி வருவதன் எதிரொலியாக 7ம் தேதி ஏஐ314 விமான சேவைக்கு பின் டெல்லி-ஹாங்காங் இடையே விமானங்கள் இயக்கப்படமாட்டாது” என்றார்.



Tags : Foreigners ,Chinese ,Government ,cancellation ,India ,Visa ,nationals , China, India, Central Government
× RELATED இந்தியா-சீனா இடையே வலுவான உறவு இரு...