×

அதிபர் கோத்தபய ராஜபக்சே பேச்சு: தீவிரவாத அமைப்புகளை செயல்பட விட மாட்டோம்

கொழும்பு: `இலங்கையில் தீவிரவாதத்துக்கு வழிவகுக்கும் அமைப்புகள் செயல்படுவதை அனுமதிக்க மாட்டோம்’ என்று அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார். இலங்கையில் கடந்த நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று கோத்தபய ராஜபக்சே  அதிபரானார். அதன் பின்னர், அவரது சகோதரரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்சே இலங்கை பிரதமராக பொறுப்பேற்றார். இந்நிலையில், இலங்கையின் 72வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அப்போது தலைநகர் கொழும்புவில் தேசியக் கொடியை ஏற்றிய பின்னர், அதிபர் கோத்தபய ராஜபக்சே பேசியதாவது: இலங்கை மக்களின் கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. தீவிரவாதத்துக்கு வழிவகுக்கும் எந்த அமைப்புகளும் நாட்டில் செயல்படுவதை அனுமதிக்க மாட்டோம். கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வந்த வடக்கு, தெற்கு பிரச்னையால் நாட்டின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் சுதந்திரமாக சிந்திக்கவும், எழுதவும் தேவையான சுதந்திரத்தை மேம்படுத்த விரும்புகிறேன். என்னுடைய தலைமையிலான அரசு எந்தவொரு எதிர் கருத்தையும் சகித்து கொள்ளவும் அதற்கு இடமளிக்கவும் தயாராக இருக்கிறது. இலங்கை ஒரு ஒருங்கிணைந்த நாடாகும். இது சுதந்திரமான, தனித்துவமான, ஜனநாயக நாடு. மக்கள் ஒவ்வொருவரின் சுதந்திரத்தையும் வலுப்படுத்துவேன் என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

தமிழில் தேசிய கீதம் இசைப்பது நிறுத்தம்
வழக்கமாக, இலங்கை சுதந்திர தின விழாவில் தமிழிலும் தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். ஆனால், நேற்றைய சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் போது சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இலங்கையில் சுதந்திர தினம் மட்டுமின்றி, எந்தவொரு அரசு விழாவிலும் இனிமேல் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது என்று கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


Tags : Gotabhaya Rajapakse ,organizations , President Gotabhaya Rajapakse, extremist organizations
× RELATED ரஜினிகாந்த் முதலில் கட்சியை பதிவு...