×

கொரோனா பாதிப்பால் கேரளாவில் கலெக்டர்கள், டாக்டர்கள் விடுமுறை ரத்து: வீட்டு கண்காணிப்பில் இருந்த 2 பேர் வெளிநாடு தப்பினர்

திருவனந்தபுரம் கேரளாவில் கொரோனா வைரஸ் பீதியை ஏற்படுத்தி உள்ளதால் 7 மாவட்ட கலெக்டர்கள், டாக்டர்களின் விடுமுடுறை  ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மக்கள் மத்தியில் கடும் பீதியை  ஏற்படுத்தி உள்ளது. தற்போது வரை ஒரு மாணவி, 2 மாணவர்களுக்கு கொரேனா வைரஸ்  பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து 3 பேரும் தனித்தனி  வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இது ஒருபுறம் இருக்க,  மருத்துவமனை மற்றும்  வீடுகளில் கண்காணிக்கப்படுவோர் எண்ணிக்கை 2,299 ஆக  உயர்ந்துள்ளது. இதில்  மருத்துவமனையில் 84 பேரும், மற்றவர்கள் வீடுகளிலும்   கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளதால்  மாநில  பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விடுமுறையில் உள்ள சுகாதாரத்துறையை  சேர்ந்த ஊழியர்கள்,   டாக்டர்கள் அனைவரின் விடுமுறையும் ரத்து  செய்யப்பட்டுள்ளது. அவர்கள்   உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது 7  மாவட்ட கலெக்டர்கள்   பயிற்சிக்காக விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.  இவர்களின்  விடுமுறையும்  ரத்து செய்யப்படும். இவர்களை அடுத்தக்கட்ட  பயிற்சியின்போது அழைக்கலாம் என்று மத்திய அரசிடம் கோரிக்கை  விடுக்கப்படும் என  சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியுள்ளார்.ஒவ்வொரு மாவட்டத்திலும் சீனாவில்  இருந்து திரும்பியவர்கள்  கணக்கெடுக்கப்பட்டு அவர்கள் சுகாதார துறை மூலம்  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். கோழிக்கோடு நகரத்தில் மட்டும் 60 பேர்  வீட்டு கண்காணிப்பில் இருந்தனர். இவர்கள் வீடுகளுக்கு சுகாதார துறையினர்  தினமும் சென்று பரிசோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று  பரிசோதனைக்கு சென்றபோது, 2 பேர் எந்த விவரமும் தெரிவிக்காமல்  வெளிநாட்டுக்கு சென்றது  தெரியவந்தது. இது  சுகாதாரத் துறையினருக்கு கடும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களை மீண்டும் இந்தியா கொண்டு வர நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் கோழிக்கோடு காவிலாம்பாறையில் சீனாவில்  இருந்து வந்த 3 பேர் கண்காணிப்பில் இருந்து வந்தனர். நேற்று இவர்களில் 2  பேர் திடீரென மாயமானார்கள். இவர்களில் ஒருவர் சற்று தொலைவில் உள்ள  சர்ச்சுக்கு தியானத்திற்கு சென்றது தெரியவந்தது. இதையடுத்து சுகாதார  துறையினர் அவரை திரும்ப அழைத்து வந்தனர். இன்னொருவர் எங்கு  சென்றார் என  தெரியவில்லை. அவரை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இதற்கிடையே சீனாவில் இருந்து திரும்பி வரும் சில மாணவர்கள் அதை மறைத்து  விட்டு வேறு நாட்டில் இருந்து வருவதாக சான்றிதழ்கள் அளித்ததாகவும்  கூறப்படுகிறது. இதற்கிடையே, ‘‘கொரோனா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள் முன்பதிவு செய்வது வெகுவாக குறைந்துள்ளது’’ என்று கேரள சுற்றுலா துறை அமைச்சர்  கடகம்பள்ளி சுரேந்திரன் நேற்று சட்டப்பேரவையில் தெரிவித்தார்.



Tags : Holidays ,home ,doctors ,collectors ,holiday ,Kerala ,persons , Corona Damage, Kerala, Collectors, Doctors
× RELATED அதிகாரிக்கு வந்த மர்ம இமெயில் உள்துறை...