×

புழுதிவாக்கம் ராஜேஸ்வரி நகரில் தூர்ந்து கிடக்கும் மழைநீர் கால்வாய்கள்: கழிவுநீர் தேக்கம், கொசு உற்பத்தி ,.. நோய் பாதிப்பில் தவிக்கும் மக்கள்

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலம், 169வது வார்டுக்கு உட்பட்ட புழுதிவாக்கம் ராஜேஸ்வரி நகர் 1, 2வது தெரு மற்றும் குறுக்கு தெருக்களில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் முறையான மழைநீர் கால்வாய் வசதியில்லை.  இதனால், மழைக்காலங்களில் இப்பகுதியில் மழைநீர் வெளியேற வழியின்றி, கழிவு நீருடன் கலந்து வீடு மற்றும் சாலையில் குளம்போல் தேங்குகிறது. நாள் கணக்கில் தேங்கும் இந்த கழிவுநீரால், கொசு உற்பத்தி அதிகரித்து மர்ம காய்ச்சலால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, தங்களது பகுதிக்கு முறையான வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பல ஆண்டுகளுக்கு முன், இங்குள்ள சாலையோரம் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான கால்வாய் தற்போது தூர்ந்து, நீரோட்டம் தடைபட்டுள்ளது.

இதில், வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பை மற்றும் கழிவுநீர் கலப்பதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. இவை இரவு நேரங்களில் அருகில் உள்ள வீடுகளுக்கு படையெடுப்பதால், தூக்கம் இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகும் சுகாதாரப்பணி சரிவர  நடைபெறுவதில்லை. பெயருக்கு துப்புரவு பணியாளர்கள் கொசு மருந்து மட்டும்  தெளித்துவிட்டு செல்கின்றனர். முறையான மழைநீர் கால்வாய் இல்லாததால் மழைக்காலத்தில் வீடுகளை தண்ணீர் சூழ்கிறது. தற்போதுள்ள சிறிய அளவிலான கால்வாயும் தூர்ந்துள்ளதால், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதுபற்றி, மண்டல சுகாதார அதிகாரியிடம் புகார்  கொடுத்தும் நடவடிக்கை இல்லை.  

தேர்தல் நேரத்தில் இங்கு வரும் அரசியல் கட்சியினர் இங்கு புதிய மழைநீர் கால்வாய் அமைத்து தரப்படும், என உறுதியளித்துவிட்டு செல்கின்றனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. முறைப்படி எங்களிடம் அனைத்து வரிகளையும் வசூலிக்கும் மாநகராட்சி நிர்வாகம் எங்களுக்கான அடிப்படை வசதிகளை மட்டும் செய்து தருவதில்லை. எனவே, இப்பகுதி மக்கள் நலன் கருதி, மழைநீர் கால்வாய், குடிநீர், பாதாள சாக்கடை போன்ற வசதிகளை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.



Tags : Rajeshwari ,city ,Rajeswari , Flushing, rajeswari, sewage stagnation, mosquito production
× RELATED திருவாரூரில் மின்சாரம் தாக்கி ரயில்வே ஊழியர் உயிரிழப்பு..!!