×

நொளம்பூர் பகுதியில் அரசு பள்ளியை தத்தெடுத்த போலீசார்: மாணவர்கள், பெற்றோர் மகிழ்ச்சி

அண்ணாநகர்: நொளம்பூர் பகுதியில் ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 210 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 12 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இந்நிலையில், திருமங்கலம் சரகத்திற்கு உட்பட்ட நொளம்பூர், ஜெஜெ நகர், திருமங்கலம் காவல் துறையினர் இந்த பள்ளியை தத்தெடுத்து, கடந்த மூன்று மாதமாக புனரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், பள்ளிக்கு தேவையான மேசை, நாற்காலி, விளையாட்டு உபகரணங்கள், மின் விசிறி, குடிநீர் சுத்தகரிப்பு இயந்திரம் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்தனர். பள்ளி வளாகத்தை சுற்றி பசுமை தோட்டமாகவும், மழைநீர் சேகரிப்பு மையத்தையும் உருவாக்கியுள்ளனர். இதற்கான ஒப்படைப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. திருமங்கலம் உதவி ஆணையர் சிவக்குமார் தலைமை வகித்தார்.

கூடுதல் ஆணையர் தினகரன், இணை ஆணையர் விஜயக்குமாரி,  துணை ஆணையர் முத்துசாமி, இன்ஸ்பெக்டர் பெருந்துறை முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இதுகுறித்து உதவி ஆணையர் சிவக்குமார் கூறுகையில், ‘‘மாணவர்களின் நலன் கருதி, பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளோம். விரைவில் இந்த பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகள் தொங்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாணவர்கள் நன்றாக படித்து சமூகத்துக்கும், தங்களது குடும்பத்துக்கும் பயனுள்ள வகையில் செயல்பட வேண்டும்,’’ என்றார்.  மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ‘‘பழுதடைந்து கிடந்த பள்ளியை சீரமைத்த காவல் துறையினருக்கு நன்றி’’ என்றனர்.

Tags : government school ,parents ,Police Adoption Government School , Nolampur, Government School, Students, Parents
× RELATED அரசு பள்ளி மாணவர்களின் நோட்டு புத்தகம் திருட்டு: மர்ம நபர்களுக்கு வலை