×

கேரளாவை மிரட்டும் கொரோனா: 7 கலெக்டர்களின் விடுமுறை ரத்து: சீனாவில் இருந்து வந்து தகவல் தெரிவிக்காதவர்கள் மீது வழக்கு

திருவனந்தபுரம்: கேரளாவில்  கொரோனா வைரஸ் பீதியை ஏற்படுத்தி உள்ளதால் 7 கலெக்டர்களின் விடுமுடுறை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே சீனாவில் இருந்து வந்து உடனடியாக  அரசிடம் தெரிவிக்காதவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய  தீர்மானிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வரை ஒரு மாணவி, 2 மாணவர்களுக்கு கொரேனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இதையடுத்து 3 பேரும் தனித்தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல் நிலையை 24 மணிநேரமும் மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். இவர்களது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இது ஒருபுறம் இருக்க மருத்துவமனை மற்றும்  வீடுகளில் கண்காணிக்கப்படுவோர் எண்ணிக்கை 2299 ஆக உயர்ந்துள்ளது. இதில்  மருத்துவமனையில் 84 பேரும், மற்றவர்கள் வீடுகளிலும் வைக்கப்பட்டு  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 140 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்தம்  பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் 46 பேருக்கு கொரோனா  பாதிப்பு இல்லை என்று அறிக்கை வந்துள்ளது. 91 பேரின் பரிசோதனை அறிக்கை  வரவேண்டி உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கேரள தலைமை செயலாளர்  டோம்ஜோஸ் தலைமையில் பேரிடர் நிவாரண முகமையின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து உள்ளதால் மாநில  பேரிடராக அறிவிக்க முடிவு செய்யப்பட்டது. இது குறித்து சுகாதாரத்துறை  அமைச்சர் சைலஜா கூறியது: கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோர்  எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆகவே நோயை கட்டுப்படுத்தும் எண்ணத்தில் மாநில  பேரிடராக அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து வந்தவர்கள்  உடனடியாக அரசிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். இது குறித்து வெளியே  சிலர் சொல்லாமல் இருக்கின்றனர். இது குற்றமாக கருதி அவர்கள் மீது வழக்கு பதிவு  செய்யப்படும்.

எனவே சீனாவில் இருந்து வந்தவர்கள் அந்தந்த பகுதி சுகாதார  அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். திருச்சூர், ஆலப்புழா,  காசர்கோடு  ஆகிய மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.  இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் 82 பேர் நெருங்கி பழகியது  கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு  உள்ளது. இவர்களில் 40 பேர் திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.  குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு  உண்டு. இந்த சூழ்நிலையில் தான் மாநில பேரிடராக அறிவிக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

விடுமுறை ரத்து
கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் விடுமுறையில் உள்ள சுகாதாரத்துறையை சேர்ந்த ஊழியர்கள்,  டாக்டர்கள் அனைவரின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர்கள்  உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். தற்போது 7 மாவட்ட கலெக்டர்கள்  பயிற்சிக்காக விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் விடுமுறையும்  ரத்து செய்யப்படும். இவர்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு செல்ல அனுமதிக்க  வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Tags : Cancellation ,Corona ,Kerala ,holidays ,collectors , Kerala, intimidate, corona
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...