×

அறிவுசார் சொத்து உரிமை மேல்முறையீட்டு வாரியத்தை வட இந்தியாவுக்கு மாற்றும் மத்திய அரசின் முயற்சி நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது : வைகோ கண்டனம்

டெல்லி : அறிவுசார் சொத்து உரிமை மேல்முறையீட்டு வாரியத்தை சென்னையில் இருந்து  இடமாற்றம் செய்ய முயற்சிப்பது நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவையில் குற்றம் சாட்டியுள்ளார். மாநிலங்களவை கூடியதும் இது தொடர்பாக பேசிய அவர், மத்திய வர்த்தக துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன் முயற்சியால் கடந்த 2003ம் ஆண்டு சென்னையில் நிறுவப்பட்ட அறிவுசார் சொத்து உரிமை மேல்முறையீட்டு வாரியம் திறம்பட செயல்படுவதாக கூறியுள்ளார். இந்த வாரியத்தின் சுற்று அமர்வுகள் மும்பை, டெல்லி, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய இடங்களில் செயல்படும் நிலையில், தலைமையகத்தை காரணமின்றி சென்னையில் இருந்து இடமாற்றம் செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாக வைகோ தெரிவித்துள்ளார்.

அறிவுசார் சொத்து உரிமை மேல்முறையீட்டு வாரியத்திடம் தற்போது 2800 வணிக குறியீடு வழக்குகளும் 600 காப்புரிமை வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக வைகோ தெரிவித்துள்ளார். தீர்ப்பாயத்தின் அமைவிடம் இதற்கு காரணம் அல்ல என்று கூறியுள்ள அவர், வாரியத்தின் தலைவர் தொழில்நுட்ப உறுப்பினர்களை தேர்வு செய்வதில் ஏற்பட்ட கால தாமதத்தாலையே வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அவர் தெரிவித்தார். அறிவுசார் சொத்து உரிமை மேல்முறையீட்டு வாரியத்தைவட இந்தியாவுக்கு மாற்றும் முயற்சியானது தேசிய ஒருமைப் பாட்டிற்கு எதிரானது என்றும் வைகோ குறிப்பிட்டு உள்ளார்.  இந்நிலையில் வைகோவின் கேள்விக்கு பதில் அளித்து பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அறிவுசார் சொத்து உரிமை மேல்முறையீட்டு வாரியத் தலைமையகத்தை இடமாற்றம் செய்யும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று தெரிவித்தார். மேலும் சில இடங்களில் கிளைகள் அமைக்கவே முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.


Tags : Central Government ,North India ,Intellectual Property Rights Appeal Board ,country ,Vaiko , Intellectual Property Rights, Board of Appeals, Vigo, State House
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...