×

தடையில்லா வர்த்தகம் அவசியம்; ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நிபந்தனை

லண்டன்: ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிவிட்ட நிலையில் அந்த அமைப்புடன் வர்த்த உறவுகளை தொடர பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளார். இங்கிலாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், டென்மார்க், கிரீஸ், இத்தாலி உள்ளிட்ட 28 நாடுகள் இணைந்த ஐரோப்பிய கூட்டமைப்பு கடந்த 1973ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த உறுப்பு நாடுகளுக்குள் விசா இல்லாமல் பயணம் செய்யலாம், பணி புரியலாம். இதில் உறுப்பினராக இருந்தாலும், பொருளாதார ரீதியாக வலுவான நாடு என்பதால் இங்கிலாந்து தனித்தே செயல்பட்டது. கூட்டமைப்பின் பின்தங்கிய நாடுகளில் வசிப்பவர்கள் வேலை தேடி இங்கிலாந்துக்கு அதிகளவில் குடி பெயர்ந்தனர். இதன் காரணமாக ஐரோப்பிய கூட்டமைப்பில் இங்கிலாந்து இருப்பதை அந்நாட்டு மக்கள் விரும்பவில்லை.

எனவே, கூட்டமைப்பில் நீடிப்பதா வேண்டாமா என்பது தொடர்பாக கடந்த 2016ல் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், 58 சதவீதம் பேர் வெளியேற வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து, ஐரோப்பிய கூட்டமைப்பிலிருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரக்சிட்’ நிகழ்வு தொடங்கியது. அரசியல், பொருளாதாரம், சட்ட விவகாரங்களில் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுடன் 40 ஆண்டாக இங்கிலாந்து ஒருங்கிணைந்து செயல்படுவதால், பிரக்சிட் வெளியேற்றத்திற்கு பிறகு தனித்து செயல்படுவதற்கான ஒப்பந்தம் நிறைவேற்ற வேண்டி இருந்தது. ஆனால், பிரக்சிட்  ஒப்பந்தம் எளிதாக  நிறைவேறவில்லை.

இந்த விவகாரத்தில் இங்கிலாந்தின் 2 பிரதமர்கள் ராஜினாமா செய்தனர். தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சனும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இன்றி தவித்தார். பிறகு நாடாளுமன்றத்தை கலைத்து, புதிதாக தேர்தலை சந்தித்து அமோக வெற்றி பெற்றார். இதனால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைத்ததால் அவரால் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடிந்தது. இந்த ஒப்பந்தம், ஐரோப்பிய கூட்டமைப்பிலும் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக மூன்றரை ஆண்டுகள், அதாவது 43 மாத இழுபறிக்குப் பிறகு ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறியது.

இந்நிலையில் லண்டனில் பேசிய ஜான்சன், ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறினாலும் அதனுடன் வர்த்தக உறவுக்கு தடை ஏதுமில்லை என்றார். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் கனடா இடையே வர்த்தக உறவில் உள்ள சில நிபந்தனைகளை சுட்டிக்காட்டியுள்ள ஜான்சன், அது போன்ற கட்டுப்பாடுகளை ஏற்க முடியாது என்று தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனின் சட்டங்கள் பிரிட்டன் மீது திணிக்கப்படக் கூடாது என்று குறிப்பிட்ட போரிஸ் ஜான்சன், தடையில்லா வர்த்த உறவையே தமது அரசு விரும்புவதாக கூறினார். கடந்த ஜனவரி 31-ம் நள்ளிரவு முதல் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறிவிட்டது. இருப்பினும் 2020 டிசம்பர் வரை சில நடைமுறைகள் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் வர்த்தக உறவை தொடர உள்ளது.

Tags : Boris Johnson ,UK ,EU , European Union, UK, Prime Minister Boris Johnson
× RELATED விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவீதம்...