×

விபத்து எச்சரிக்கை பலகை இல்லாததால் சாலைகளில் விபத்துகள் அதிகரிப்பு

சிவகாசி: சிவகாசி பகுதியில் உள்ள சாலைகளில் விபத்து எச்சரிக்கை பலகை இல்லாததால், சாலைகளில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கியச் சாலைகளை பராமரிக்கும் பணி தனியாரிடம் அரசு ஒப்படைத்து வருகிறது. இதற்கு நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சாலை பராமரிப்பு பணிகளை, தமிழக அரசு தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் எரிச்சநத்தம்-விருதுநகர் சாலை ஏற்கனவே தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு புதிய சாலை போடப்பட்டுள்ளது. தனியாரிடம் ஒப்படைக்கப்படும் சாலைகளுக்கான பராமரிப்பு செலவை அரசே வழங்கி விடும். இந்த பணத்தில் தனியார் 5 ஆண்டுகளுக்கு சாலையை சீரமைத்து பராமரித்து வர வேண்டும். திருவில்லிபுத்தூரில் இருந்து சிவகாசி, விருதுநகர், அருப்புகோட்டை, நரிக்குடி, பார்த்திபனூர் வரையிலான 122 கி.மீ வரையிலான மாநில நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகள் தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகர்-சிவகாசி வரையிலான மாநில நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகள் தனியார் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சாலையில் பல இடங்களில் போக்குவரத்து எச்சரிக்கை பலகைள் முறையாக வைக்கப்படவில்லை. சாலை சந்திப்புகளில் எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருதுநகர் அருகே எரிச்சநத்தம் சாலை விலக்கில் தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துகுள்ளானது. இதில் கல்லூரி மாணவர்கள் பலர் படுகாயமடைந்தனர். இங்கு எச்சரிக்கை பலகை எதுவும் இல்லாததால் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது. சிவகாசி-விருதுநகர் சாலையில் உள்ள ஆபாய திருப்பங்களில் தடுப்புகள் பல இடங்களில் வைக்கப்படாமல் உள்ளது.

வாகனங்கள் விபத்துக்குள்ளானால் உயிர் பலிகள் ஏற்பட கூடும். சாலை பராமரிப்பு பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து விழிப்புணர்பில் அலட்சியமாக உள்ளனர். தனியாரிடம் சாலையை ஒப்படைக்கும் முன் இந்தசாலையில் எத்தனை மரங்கள் உள்ளன என்ற விபரங்கள் நெடுஞ்சாலைத்துறை மூலம் சேகரிக்கப்பட்டது. ஆனால், சமூக விரோதிகள் சிலர் மரங்களை சேதப்படுத்தி வருகின்றனர். இதனையும் தனியார் சாலை பாராமரிப்பு ஒப்பந்ததாரர்கள் கண்டு கொள்வதில்லை. சிவகாசி உதவி கோட்ட நெடுஞ்சாலைத்துறை வசமுள்ள சிவகாசி-சாத்தூர், விளாம்பட்டி-ஆலங்குளம், சிவகாசி-திருவில்லிபுத்தூர், சிவகாசி-கழுகுமலை சாலை பராமரிப்பு பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலை துறை வசம் உள்ள நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க பட்டுள்ளதால் போக்குவரத்து எச்சரிக்கை விதிமுறைகள் சரிவர கடை பிடிக்க படாமல் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது. சாலைப் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தினர் சாலைகளில் விபத்து எச்சரிக்கை பலகைகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Accidents ,accident , Accident
× RELATED பூந்தமல்லி அருகே கார் தலைகுப்புற...