×

கலவை அடுத்த ஆரூர் கிராமத்தில் கனிம வளத்தை கொள்ளையடிக்கும் மணல் மாபியாக்கள்

கலவை: கலவை அடுத்த ஆரூர் கிராமத்தில் மடுவில் உள்ள கனிம வளத்தை மணல் மாபியாக்கள் கொள்ளையடிக்கின்றனர். இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கலவை அடுத்த ஆரூர் கிராமத்தில் மடுவில் பகல் முழுவதும் மணல் சலித்து குவியல் குவியலாக கொட்டி வைத்து, இரவு நேரத்தில் மாட்டு வண்டி, டிராக்டர்களில் ஆரணி, செய்யாறு, கலவை, திமிரி,  போளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் மாபியாக்கள் அரசியல் வாதிகளின் துணையோடு மணலை திருட்டுத்தனமாக விற்று கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். அவ்வாறு ஏற்றிச்செல்லும் ஒரு மாட்டு வண்டி மணல் ₹2,400,  லாரியில் மணல் சப்ளை செய்தால் ரூ.30,000 வரை விற்பனை படுஜோராக நடைபெறுகிறது.

இது பல மாதங்களாக காவல்துறை அதிகாரிகளும், வருவாய்த் துறையினரும் நடவடிக்கை எடுத்தும் அவர்கள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு திருட்டுத்தனமாக இரவில் சப்ளை செய்து பணம் சம்பாதிக்கின்றனர். மணல் திருட்டால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது என்று இப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மணல் திருடும் கும்பல் மேல்மட்ட அதிகாரிகளை தன் கையில் வைத்துக் கொண்டு 4 அடி முதல் 10 அடிவரை பள்ளம் எடுத்து மணலை சுரண்டுகின்றனர். இதனால், மழை காலங்களில் ஈரப்பதம் இல்லாமல் சுற்றியுள்ள ஏரிகளிலும், மடுவுகலிலும்  தண்ணீர் இல்லாமல் போகிறது. இதுகுறித்து, கிராம மக்கள் கூறுகையில், ‘மணல் திருடர்களைப் பற்றி தகவல் சொன்னால் எங்களை மிரட்டுகிறார்கள்.  கடந்த ஆறு மாதங்களில் இதுவரை 50 மேற்பட்ட மாட்டு வண்டிகள் வாழைப்பந்தல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இதுபோன்று சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். காவல் துறை நடவடிக்கை எடுத்தாலும் மணல் திருட்டு நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே வருவாய்த் துறை, காவல் துறையும் இணைந்து அதிரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : village ,compound ,Aroor , Sand mafias
× RELATED மரத்திலேயே கருகும் பப்பாளி