×

வனத்துறை, தீயணைப்பு துறையினர் இணைந்து காட்டுத்தீயை தடுப்பது குறித்த கூட்டு பயிற்சி முகாம்

பட்டிவீரன்பட்டி: திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே தாண்டிக்குடி மலை அடிவார பகுதியில் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து காட்டுத்தீயை தடுப்பது குறித்த கூட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.
பெரும்பாறை, தாண்டிக்குடி மலைப்பகுதிகளில் கோடை வெயில் காலத்தில் காட்டுத்தீ பிடித்து எரிவது என்பது தொடர்கதையாக உள்ளது. தற்போது இரவு நேரத்தில் பனியின் தாக்கம், பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இம்மலைப்பகுதியில் செடி, கொடிகள், புட்கள் ஆகியவை அதிகளவில் காய்ந்து வருகின்றன. இந்த காட்டு தீயினால் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களும், வனத்துறை நிலங்களும், அரிய வகை வன விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன.

வரவுள்ள கோடை காலத்தில் தீயினால் ஏற்படும் பாதிப்பை தடுக்கும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறையினரும், வனத்துறையினர் இணைந்து காட்டு தீயை பரவாமல் அணைப்பது குறித்த கூட்டுபயிற்சியினை மேற்கொண்டனர்.
இந்த கூட்டுப்பயிற்சியின் போது மலை அடிவாரத்தில் பயிற்சிக்காக தீ வைக்கப்பட்டு அதனை எந்த திசையிலிருந்து அணைப்பது, தீயிலிருந்து நம்மை எவ்வாறு காத்துக்கொள்வது, காட்டு தீ மேலும் பரவாமல் இருக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த கூட்டுபயிற்சி முகாமில் செய்து காண்பிக்கப்பட்டது.

இதுபற்றி வனத்துறையினர் கூறிதாவது, காட்டு தீ இயற்கையாகவே 1 சதவீதம் தான் ஏற்படுகிறது. மீதி 99 சதவீதம் மனிதர்களால் தான் ஏற்படுத்தப்படுகிறது. காட்டில் தேன் எடுக்க செல்பவர்கள் தேனீக்களை கலைக்க பயன்படுத்தும் தீ, வனப்பகுதிகளில் சிகரெட்டை குடித்து விட்டு அணைக்காமல் தூக்கி எரிவது போன்ற பல்வேறு காரணங்களால் காட்டு தீ ஏற்படுகிது. இதனால் பொதுமக்கள் வனத்தை காப்பாற்ற போதிய விழிப்புணர்வுடன் நடக்க வேண்டும். நமது வனத்தை எதிர்கால சந்ததியினரும் பயன்பெற வனத்தை காப்பது அவசியம் என்றார்.

இந்த கூட்டு பயிற்சி முகாமில் வனத்துறையை சேர்ந்த வனவர்கள் முத்துச்சாமி, அய்யனார்செல்வம், வன காப்பாளர்கள் பாண்டி, ராஜேந்திரன், சபரி மற்றும் வத்தலக்குண்டு தீயணைப்பு நிலைய அலுவலர் பொன்னம்பலம், நிலைய போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன், நிலக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜோசப் மற்றும் வனத்துறை, தீயணைப்பு துறையை சேர்ந்த 60க்கும் மேற்பட்டவர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

Tags : training camp ,fire department , Wildfires
× RELATED தஞ்சாவூர் மாவட்ட சத்யா விளையாட்டரங்கில் கோடை கால பயிற்சி முகாம் துவக்கம்