×

கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழப்பு: பலர் படுகாயம்

நைரோபி: கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 14 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்யா தலைநகர் நைரோபியின் வடமேற்கில் உள்ள ககமிகா நகரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவர்கள் குறுகலான படிக்கட்டுகள் வழியாக வெளியே வந்தபோது தி்டீரென நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் பலர் ஒருவர் மீது மற்றவர் விழுந்ததில் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சிலர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெரிசல் எதனால் ஏற்பட்டது, மாணவர்கள் பீதியடைந்து ஓடியது ஏன் என்பது குறித்து பள்ளி நிர்வாகத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கென்யாவில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், அங்கு பள்ளிகளின் பாதுகாப்பு தன்மை கேள்விக்குறியாகி இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து பேசிய கென்யாவின் கல்வித்துறை அமைச்சர், ஜார்ஜ் மாகோஹா 14 மாணவர்கள் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். குழந்தையின் இழப்பு மிகவும் வேதனையானது என தெரிவித்துள்ள அவர், குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு தமது இரங்கலையும் தெரிவித்துள்ளார்.


Tags : children ,Kenya ,pupils ,Kakamega , Kenya, school, stampede, students, death
× RELATED 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று...