×

ஆரல்வாய்மொழி அருகே பரபரப்பு: கட்சி போராட்டத்துக்காக மாணவர்கள் கடத்தல்? நாம் தமிழர் நிர்வாகியை பிடித்து போலீசார் விசாரணை

ஆரல்வாய்மொழி:  குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே தாழக்குடி பகுதியை சேர்ந்த 9, 6, 5, 4, 2ம் வகுப்புகளில் படிக்கும் 7 மாணவர்கள் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு நேற்று காலை நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்தவர்கள் அந்த மாணவர்களை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத் தீ போல் பரவியது. இது பெற்றோரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தாழக்குடி, மீனமங்கலம், சந்தவிளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொது மக்கள், தங்கள் குழந்தைகள் பற்றிய தகவல் அறிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளுக்கு படையெடுத்தனர்.  இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவரின் காரில் மாணவர்கள் சென்றதை சிலர் பார்த்து உள்ளனர். இதையடுத்து உடனடியாக செல்போனில் அந்த பிரமுகரை பொதுமக்கள் தொடர்பு கொண்டனர்.

அப்போது கட்சி சார்பில் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை கண்டித்து கலெக்டர் அலுவலகம் அருகே நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க மாணவர்களை காரில் அழைத்து வந்ததாக அவர் கூறினார். இதனால் பொதுமக்களுக்கும், அந்த கட்சி பிரமுகருக்கும் இடையே செல்போனிலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ஆரல்வாய்ெமாழி போலீசார் மற்றும் நாகர்கோவில் வட்டார கல்வி அலுவலர் ஹரிக்குமார், ஜெயசந்திரன் உள்பட அதிகாரிகள் அங்கு வந்தனர். இதற்கிடையே போலீசார் அந்த கட்சி பிரமுகரை பிடித்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அவர் அந்த கட்சியின் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி இணைச்செயலாளர் என தெரியவந்தது.

இந்நிலையில் மீட்கப்பட்ட மாணவர்கள் நெடுஞ்சாலைத்துறை ேராந்து வாகனம் மூலம் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் பொது மக்கள் அந்த வாகனத்தை முற்றுகையிட்டு குழந்தைகளை கடத்தி சென்றவரை இங்கு அழைத்து வாருங்கள். அப்போதுதான் வாகனத்தை விடுவோம் என்று கூறி மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் காவல் நிலையம் வந்து புகார் கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். அதன்பின் போலீஸ் ரோந்து வாகனம் விடுவிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

உருண்டு புரண்டு கதறிய பெற்றோர்
பள்ளிக்கு சென்று கொண்டிருந்த குழந்தைகளை மர்மநபர் காரில் கடத்திச்சென்ற தகவல் காட்டுத்தீ போல் பரவியது. உடனே பதற்றமடைந்த பெற்றோர் 300 முதல் 400க்கும் மேற்பட்டோர் அழுதபடி பள்ளிகளில் குவிந்தனர். பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை அவர்கள் தேடிய போது தொடக்கப்பள்ளியில் 5 குழந்தைகளை காணவில்லை, அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 2 மாணவர்களை காணவில்லை. உடனே அக்குழந்தைகளின் தாய்மார்கள் ரோடு என்றும் பாராமல் தரையில் விழுந்து உருண்டு புரண்டு கதறினர். கட்சிக்கொடி கட்டிய காரில் மாணவர்கள் கடத்திச்செல்லப்பட்டதாக ஒருவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சோதனை சாவடிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது தேரேகால்புதூர் அருகே நாம்தமிழர் கட்சி நிர்வாகியின் காரை போலீசார் மடக்கி  மாணவர்களை மீட்டு பள்ளிகளுக்கு அழைத்து சென்றனர். குழந்தைகளை கண்டதும் பெற்றோர் ஓடி வந்து கட்டியணைத்து கண்ணீர்விட்டது மிகவும் உருக்கமாக இருந்தது.



Tags : argument ,executive ,Tamil , Oral language, we are investigating the Tamil administrator, the police
× RELATED பெண்களுக்கு எதிராக ஆபாச கருத்து...