×

தொழிலாளர்கள் பற்றாக்குறை தொடர்ச்சியாக பணிக்கு வந்தால் வார இறுதியில் 3 குவாட்டர் ஃப்ரீ: ஒர்க்‌ஷாப் உரிமையாளர் நூதன அறிவிப்பு

திருப்பூர்:  திருப்பூர்  மாநகர் பகுதியில் உள்ள வெல்டிங் ஒர்க்‌ஷாப்பிற்கு வாரம் முழுவதும் விடுமுறை எடுக்காமல் பணிக்கு வந்தால் வார இறுதி நாளில் 3 குவாட்டர் மதுபானம் இலவசம் என ஒர்க்‌ஷாப் கேட்டில் உரிமையாளர் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளதால் தொழில்முனைவோர் அதிருப்தியடைந்துள்ளனர். திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர்  பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள்  இயங்கி வருகிறது. தொழிற்சாலைகள்,  குடியிருப்புகளுக்கு தேவையான கதவு, ஜன்னல், படிக்கட்டுகள்,  கிரில் ஒர்க் பணிகளுக்கு வெல்டர்கள், ஹெல்பர்கள் அதிகளவு  தேவைப்படுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இரும்பு வேலைக்கான பேப்ரிக்கேஷன்  பணிகளுக்கு வெல்டர்கள், ஹெல்பர்கள் பற்றாக்குறை அதிகரித்து  வருகிறது. குறித்த காலத்திற்குள் பணிகளை  முடிக்க முடியாமல் பேப்ரிக்கேஷன் உரிமையாளர்கள் அவதிப்படுகின்றனர்.

இதனால்,  திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியை ேசர்ந்த ஒர்க்‌ஷாப் உரிமையாளர்  கேட்டில் வெல்டர், ஹெல்பர்கள் பணிகளுக்கு தொழிலாளர்கள் தேவை எனவும், வாரம்  முழுவதும் விடுமுறையின்றி வேலைக்கு வந்தால் வார இறுதி நாளில் 3 குவாட்டர்  மதுபானம் இலவசமாக வழங்கப்படுமென மொபைல் எண் பதிவிட்டு பிளக்ஸ் போர்டு  வைத்துள்ளார். இதை அவ்வழியே சென்ற ஒருவர் தனது முகநூலில்  பதிவிட்டுள்ளார். கடந்த வாரம் பின்னலாடை உற்பத்தியாளர் ஒருவர் தனது  நிறுவனத்திற்கு வேலைக்கு வரும் கட்டிங், டெய்லர், உதவியாளர் ஆகியோர்களுக்கு  தினமும் சம்பளத்துடன் ஒரு குவாட்டர் மதுபானம் இலவசமென நோட்டீஸ்  விநியோகித்தது குறித்து நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதற்கு  பின்னலாடை உற்பத்தியாளர்கள் பலர் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.  இந்நிலையில், வெல்டிங் ஒர்க்‌ஷாப் உரிமையாளர்கள் வைத்துள்ள பிளக்ஸ் போர்டால் தொழில்  முனைவோர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பிளக்ஸ் போர்டில் இருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது: வெல்டர்கள்,  உதவியாளர்கள் பலர் மதுபோதைக்கு அடிமையாகியுள்ளனர். 90 சதவீதம்  தொழிலாளர்களுக்கு தினமும் சம்பளம் வழங்கப்படுவதால், மதுபானத்திற்கு  அடிமையாகியுள்ளனர். அடிக்கடி விடுமுறை எடுத்துக்கொள்கின்றனர். இதை தவிர்க்க  வாரம் முழுவதும் வேலைக்கு வந்தால் வாரத்தின் இறுதி நாளில் 3 குவாட்டர்  இலவசமாக வழங்குவதாக போர்டு வைத்துள்ளேன் என்றார்.

Tags : owner , Workers, 3 Quarter, Workshop Owner
× RELATED ஜல்லிக்கட்டுகளில் ஒரே உரிமையாளர்...