×

மதுரையில் கலைஞருக்கு எந்த இடத்தில் சிலை? வருவாய்த்துறை கமிஷனருக்கு உத்தரவு

மதுரை: மதுரை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் கோ.தளபதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: முன்னாள் முதல்வர் கலைஞருக்கு புகழ் சேர்க்கும் வகையில், மதுரையில் திமுக சார்பில் சிலை அமைக்க முடிவு செய்து, கடந்த 3.9.2018ல் அனுமதி ேகாரி மதுரை கலெக்டரிடம் மனு அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், ஜெயலலிதாவின் சிலை வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப். 3ம் தேதி, கடந்த டிச. 6ம் தேதி அளித்த மனுக்களில், மதுரை - சிவகங்கை சாலையில் கே.கே.நகர் பால்பண்ணை சந்திப்பிலோ, மதுரை பழங்காநத்தம் - திருப்பரங்குன்றம் பைபாஸ் சாலை ரவுண்டானா சந்திப்பிலோ அமைக்க அனுமதி கோரினோம். இதில், ஏதாவது ஒரு இடத்தில் சிலை அமைப்பதற்கான இடத்தை இறுதி செய்து, அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

 இந்த மனு நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆஜராகி, ‘‘அரசின் முடிவிற்காக கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. சிலை வைக்க அனுமதிப்பது குறித்து வருவாய்துறை தான் முடிவெடுக்க முடியும்’’ என்றார்.  மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் வீராகதிரவன், வக்கீல் லிங்கதுரை ஆஜராகி, ‘‘மனு அளிக்கப்பட்டு கிட்டதட்ட ஒன்றரை மாதம் ஆகிவிட்டது. அரசு தரப்பில் முடிவெடுக்க வேண்டுமென்றே காலம் தாழ்த்துகின்றனர்’’ என்றனர். இதையடுத்து நீதிபதி, ‘‘இந்த வழக்கில் தமிழக அரசின் வருவாய்த்துறை கமிஷனர், தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். அவர், முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சிலை வைக்க எந்த இடத்தில் அனுமதிப்பது என்பது குறித்து 8 வாரத்தில் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.

Tags : Madurai ,idol ,artist ,Commissioner of Revenue , Madurai, kalaignar Karunanidhi, Statue, Revenue Commissioner,
× RELATED மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விழாவில்...