×

போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள 9 இடங்களில் நடைமேம்பாலம் அமைக்க மாநகராட்சி திட்டம்: விரைவில் ஆய்வு

சென்னை: சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள 9 இடங்களில் நடைமேம்பாலம் அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. சென்னையில் 238 பாலங்கள், 14 ேமம்பாலங்கள், 4 நடைமேம்பாலங்கள், 16 சுரங்கப்பாதைகள், 5 சுரங்க நடைபாதைகள் ஆகியவற்றை மாநகராட்சி பராமரித்து வருகிறது. இந்த பாலங்களை சீரமைக்கவும் பாரமரிக்கவும் மாநகராட்சி பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இதை தவிர்த்து 14 மேம்பாலங்களில் வண்ண விளக்குகள் அமைக்கும் பணி மற்றும் ₹8 கோடி மதிப்பீட்டில் வெர்டிகல் கார்டன் அமைக்கும் பணி மேற்கொள்ளபட உள்ளது. மேலும், இசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலையை இணைக்கும் வகையில் 6 மேம்பாலம், கோயம்பேடு, விருகம்பாக்கத்தை இணைக்கும் பெரிய மேம்பாலம் ஆகியவற்றை அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இடங்களில் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல ஏதுவாக 9 இடங்களில் நடைமேம்பாலம் அமைப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி புரசைவைாக்கம் நெடுஞ்சாலையில் அபிராமி மால், பெரம்பூர் ரயில் நிலையம், ஹாரிங்டன் சாலை மாநகராட்சி பள்ளி, ஆற்காடு சாலை விஜயா மால், அண்ணாநகர் 2வது அவென்யூ ஐயப்பன் கோயில், அண்ணாநகர் 4வது அவென்யூ கந்தசாமி கல்லூரி, லஸ் கார்னர், எல்பி சாலை, அடையாறு டிப்போ, சர்தார் படேல் சாலை அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 9 இடங்களில் புதிதாக நடைமேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.எனவே இது தொடர்பாக ஆய்வு நடத்தவும் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக, இந்த சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை, தேவையான நிலம், சமூக மற்றும் பொருளாதார நிலைமை உள்ளிட்டவைகள் தொடர்பாக ஆய்வு நடத்தப்படவுள்ளது, என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : corporation ,traffic congestion areas ,places ,walkway , congestion, Municipal ,review soon
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு