வாலிபர் மாயமான வழக்கில் திடீர் திருப்பம் நண்பர்களே அடித்து கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசியது அம்பலம்: ஓராண்டுக்கு பிறகு துப்புதுலங்கியது

பல்லாவரம்: பல்லாவரம் அருகே கடந்த ஆண்டு காணாமல் போனதாக கருதப்பட்ட வாலிபரை, நண்பர்களே அடித்து கொலை செய்து, சடலத்தை கிணற்றில் வீசியது தெரியவந்தது.பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், கரிகாலன் தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (21). இவர் படித்து முடித்து விட்டு வேலை தேடி வந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வீட்டை விட்டு வெளியே சென்றவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால், சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து அவரது தந்தை தனசேகரன், சங்கர் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் அடிப்படையில் போலீசார் காணவில்லை என்று வழக்குப் பதிவு செய்து லோகேஷை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் லோகேஷின் நண்பர்களான சிவா (23), நித்திஷ்   (24), விக்கி (22), பாஷா (21), ரவி (24) ஆகிய 5 பேரை  சங்கர் நகர் போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது, லோகேஷ் குறித்து அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை சங்கர் நகர் காவல் நிலையம் அழைத்து வந்து முறைப்படி விசாரணை செய்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. லோகேஷ் மற்றும் கைதான 5 பேரும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள், முன்விரோத தகராறில் ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனிடையே, இந்த கொலை திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட நபரிடம், லோகேஷ் கூறியதாக தெரிகிறது. இதனால், கடந்த ஏப்ரல் மாதம் லோகேஷுக்கும் அவரது நண்பர்கள் 5 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த 5 பேரும், திட்டமிட்டு லோகேஷை அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை அனகாபுத்தூர் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள பம்ப் ஹவுஸ் கிணற்றில் வீசிச் சென்றுள்ளனர். மேலும், லோகேஷை அவரது பெற்றோர் தேடியபோது, தங்களுக்கு ஒன்றும் தெரியாதது போல், அவர்களும் உடன் சேர்ந்து தேடியுள்ளனர், என்பது தெரியவந்தது.

இதையடுத்து, லோகேஷ் உடலை கைப்பற்றுவதற்காக பல்லாவரம் தாசில்தார் முன்னிலையில் சங்கர் நகர் போலீசார், தாம்பரம் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து நேற்று அந்த கிணற்றில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மாலை 4.30 மணியளவில் லோகேஷின் எலும்புக்கூடு கிடைத்தது. இதனை தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மாயமானதாக கருதப்பட்ட வாலிபர், நண்பர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>