×

சிஏஏ ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது 4 நாளில் 3வது முறையாக டெல்லியில் நள்ளிரவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: தேர்தல் பணியிலிருந்து போலீஸ் அதிகாரி நீக்கம்

புதுடெல்லி: சிஏஏ ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக டெல்லியில் நள்ளிரவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக  டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று  வருகின்றன. கடந்த வியாழக்கிழமையன்று டெல்லி ஜமியா மிலியா பல்கலைக்கழகத்தில் இருந்து ராஜ்காட்  நோக்கி பேரணி சென்ற மாணவர்கள் மீது ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் ஒரு  மாணவர் காயமடைந்தார். துப்பாக்கிச்சூடு நடத்திய 18 வயதை எட்டாத சிறுவனை பிடித்து  போலீசார் விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவத்தின் சூடு ஆறுவதற்குள், கடந்த சனிக்கிழமை 25 வயது ஆசாமி  ஒருவர், தொடர் ஆர்ப்பாட்டம் நடக்கும் இடமான டெல்லி ஷாகீன்பாக் பகுதியில்,  இரண்டு முறை துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் யாரும்  காயமடையவில்லை. அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஜமியா மிலியா இஸ்லாமியா  பல்கலைக்கழகத்தின் கேட் எண் 5ல், அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பின்னர் ஸ்கூட்டியில் அவர்கள் தப்பிச்சென்றுவிட்டனர். அதிருஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை.

கடந்த 4 நாட்களில் 3வது முறையாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ள சம்பவம் டெல்லியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவத்தை தொடர்ந்து, அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வெளியே நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடி, போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். மூத்த போலீஸ் அதிகாரி குமார் ஞானேஷ், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் பேசுகையில், ‘‘புகார் கொடுத்தால் விசாரணை நடத்துகிறோம். இருந்தும், மர்ம நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்’’ என்றார். இதற்கிடையே, டெல்லியில் வரும் 8ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடக்கிறது. அதற்காக கட்சிகள் பிரசாரம் செய்து வரும் நிலையில்,  ஜமியா மிலியா பல்கலைக்கழகத்திற்கு வெளியே துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர், தென்கிழக்கு டெல்லியின் துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) சின்மாய் பிஸ்வாலை, தேர்தல் ஆணையம் அவரை பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. தொடர் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னையால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



Tags : Midnight firing ,Delhi ,police officer ,CAG ,CAA ,Demonstrators Midnight Firing In Delhi , CAA demonstrators,Delhi, Police ,dismissed
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...