×

சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர்க்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டம்(சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்பிஆர்), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். சிஏஏ, என்சிஆர், என்பிஆர்க்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி உரையுடன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கியது. கடந்த 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை தொடர்ந்து நேற்று காலை மக்களவை கூடியதும், கேள்வி நேரம் தொடங்கப்பட்டது. அப்போது காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிஏஏ, என்சிஆர், என்பிஆர்க்கு எதிராக அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷங்கள் எழுப்பினர். சிலர், ‘ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள், அரசியல் சாசனத்தை காப்பாற்றுங்கள்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்திருந்தனர். அப்போது, அவர்களிடம், ‘‘ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது இப்பிரச்னைகள எழுப்பலாம், உங்களுக்கு போதுமான வாய்ப்புகள் அளிக்கப்படும்’’ என சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் கூறினர்.

இந்த போராட்டங்களுக்கு இடையில் கேள்வி நேரத்தில் 9 கேள்விகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. அதன்பின் பூஜ்ய நேரத்தில் காங்கிரஸ் மக்களவை தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரியை பேச சபாநாயகர் அனுமதித்தார். அப்போது அவர், ‘‘அரசியல் சாசனத்தை காக்க மக்கள் தேசியக் கொடியுடன் போராடிக் கொண்டிருக்கின்றனர். இதில் சிலர் இரக்கமின்றி கொல்லப்பட்டனர். மக்களின் குரலை, குண்டுகளால் அடக்க முடியாது. பாஜ.வினர் போலி இந்துக்கள். உண்மையான இந்துக்களாக இருந்திருந்தால் வேறுமாதிரியாக நடந்து கொண்டிருப்பர்’’ என்றார்.தொடர்ந்து மக்களவையில் அமளி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மாநிலங்களவைஇதேபோல், மாநிலங்களவை நேற்று காலை கூடியதும், ஓமன் சுல்தான், குவாபாஸ் பின் சயீத் அல் சயீத் மறைவு, ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் 29 பேர் மற்றும் விலங்குகள் பலியானதற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மாநிலங்களவை எம்.பி மேரி கோமுக்கு பத்ம விபூஷண் விருது, முன்னாள் எம்.பி.க்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், ஜார்ஜ் பெர்னாண்டஸ், மனோகர் பாரிக்கர் ஆகியோருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதையும் அவைத் தலைவர் வெங்கையா நாயுடு பெருமையுடன் குறிப்பிட்டார்.

அதன்பின் அவை நடவடிக்கைகள் தொடங்கியது. சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் குறித்து விதி எண் 267-ன் கீழ் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ், திரிணாமுல், பகுஜன் சமாஜ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர். இவற்றை நிராகரித்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் இப் பிரச்னையை எழுப்பலாம் என்றார். ஆனால் இந்த விவகாரம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர். எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், ‘‘விதிமுறைகள் அடிப்படையில்தான் அவையை நாம் நடத்துகிறோம். விவாதம் நடத்துவதற்கு 267 என்ற விதி உள்ளது. அதற்கு அனுமதி இல்லையென்றால், அந்த விதி ஏன் இருக்க வேண்டும்?. பா.ஜ ஆளும் மாநிலங்களில் மக்கள் கொல்லப்படுகின்றனர். அதனால் இதுகுறித்து விவாதத்துக்கு அனுமதிக்க வேண்டும்’’ என்றார்.  எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை ஏற்கப்படாமல், கேள்வி நேரம் தொடங்கப்பட்டதால், அக்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று எதிர்ப்பு தெரிவித்தனர். அமளி தொடர்ந்ததால், மாநிலங்களவை மதியம் முதல் 12 மணி வரையும், பின்னர் 2 மற்றும் 3 மணி வரையும், இறுதியில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அமைச்சர் தாக்கூருக்குஎதிராக கோஷம்
சிஏஏ-வுக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்கள் பற்றி சமீபத்தில் நடந்த பேரணியில் பேசிய மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், ‘‘தேசத்துரோகிகளை சுட்டுத்தள்ளுவோம்’’ என குறிப்பிட்டார். இதற்கு மக்களவையில் நேற்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அவையின் மையப் பகுதியில் கோஷமிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள், ‘‘உங்களின் குண்டு எங்கே உள்ளது. சுடுவதை நிறுத்துங்கள் என கோஷமிட்டனர். கேள்வி நேரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அனுராக் தாக்கூர் பதில் அளிக்கும் போதெல்லாம், அவருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்த கோஷத்தை எழுப்பினர்.

மாநிலங்களுக்கு2 தவணைகளில்ஜிஎஸ்டி இழப்பீடு
மக்களவை கேள்வி நேரத்தின்போது, ஜிஎஸ்டி இழப்பீடு தொகை இன்னும் வரவில்லை என தெலங்கானா மற்றும் ஒடிசா எம்.பி.க்கள் எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர், ‘‘மாநிலங்களுக்கு 2 மாதங்களுக்கு ஒரு முறை ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கப்படுகிறது. 2019 செப்டம்பர் மாதம் வரை ஜிஎஸ்டி இழப்பீடு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு அக்டோபர்-நவம்பர் மாதத்துக்கான இழப்பீடு இனிமேல் வழங்கப்படவுள்ளது. அது 2 தவணைகளில் வழங்கப்படும்’’ என்றார்.

அலகாபாத் பல்கலையில் வன்முறை இல்லை
கேள்வி நேரத்தில் பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ‘‘ஜமியா மிலியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகங்களில்தான் வன்முறை நடந்தது. அலகாபாத் பல்கலையில் வன்முறை நடந்ததாக தகவல் இல்லை. இந்த வன்முறை சம்பவங்கள் குறித்து விசாரிக்க உயர்நிலைக் குழுவிவை அமைக்கும்படி ஜமியா மிலியா இஸ்லாமிய பல்கலை வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய பல்கலைக்கழகங்கள் தன்னாட்சி அந்தஸ்து பெற்றவை. இது போன்ற சம்பவங்களை விசாரிக்க பல்கலைக்கழகங்களுக்கு அதிகாரம் உள்ளது’’ என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐதராபாத் எம்.பி அசாவுதீன் ஒவைசி பேசுகையில், ‘‘நான் ஜமியா பல்கலை மாணவர்களுக்கு ஆதராவக இருக்கிறேன். இந்த நாடே அவர்களுக்கு ஆதரவாக உள்ளது. இந்த அரசு மாணவர்களை துன்புறுத்துகிறது. இது அவமானம்’’ என்றார்.

ஜனாதிபதி உரைக்கு எதிராக திரிணாமுல் 6 தீர்மானம்
‘‘குடியுரிமை திருத்த சட்டம் வரலாற்று சிறப்புமிக்கது’’ என தனது உரையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குறிப்பிட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.இந்நிலையில் ஜனாதிபதி உரையில் திருத்தம் கோரி 6 தீர்மானங்களை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்துள்ளது. திரிணாமுல் எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரைன், மாநிலங்களவை தலைமை கொறடா சுகேந்து சேகர் ராய் ஆகியோர் மாநிலங்களவையில் இந்த திருத்தங்களை தாக்கல் செய்தனர்.

அதில் சிஏஏ, என்சிஆர், என்பிஆர்-வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்துவரும் நிலையில் ஜனாதிபதி அமைதி காப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். இதே திருத்தங்கள் மக்களவையிலும் தாக்கல் செய்யப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்தது.

Tags : Opposition parties ,parliament ,parties ,NRC ,CAA ,NPR CAA ,NPR ,Opposition , CAA, NRC, NPR, parliament
× RELATED ஒன்றாக நாம் இருந்தால் இந்த நிலை மாறும்: காங்கிரசின் பிரசார பாடல் வௌியீடு