×

சிஏஏ போராட்டங்கள் தற்செயலானவை அல்ல நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு அரசியல் வடிவமைப்பு: பிரதமர் மோடி கடும் விமர்சனம்

புதுடெல்லி: ‘‘டெல்லி சீலாம்பூர், ஜமியா நகர் மற்றும் ஷாகீன்பாக் ஆகிய  இடங்களில் நடைபெறும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான போராட்டங்கள் தற்செயலான நிகழ்வுகள் அல்ல.  நாட்டின் நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு அரசியல்  வடிவமைப்பு” என்று  பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். டெல்லி சட்டப்பேரவை  தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 8ம் தேதி நடைபெறவுள்ளதையொட்டி, பிரதான  அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் பாஜ  சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார். கிழக்கு டெல்லியின் கர்கர்தூமா  பகுதியில் நடைபெற்ற பொதுகூட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:குடியுரிமை  திருத்த சட்ட விவகாரத்தில், தவறான தகவல்களை பரப்பி ஆம் ஆத்மி கட்சியும்,   காங்கிரசும் மக்களைத் தூண்டிவிடுகின்றன.  அவர்கள்  அரசியலமைப்பையும், தேசியக் கொடியையும் முன்னாள் ஏந்தி நிற்கின்றனர்.  

ஆனால் உண்மையான சதித்திட்டத்திலிருந்து கவனத்தை திசை திருப்புவதே அவர்களின்  நோக்கமாக உள்ளது. ஷாகீன்பாக் போராட்டத்தால் நொய்டாவில் இருந்து வருவோரும்,  செல்வோரும் கடும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். டெல்லி மக்கள் அனைவரும் இந்த வாக்கு வங்கி அரசியலை அமைதியாகவும் கோபத்துடன் பார்த்துக் கொண்டுள்ளனர். சீலாம்பூர்,  ஜாமியா (நகர்) மற்றும் ஷாகீன்  பாக்கில் கடந்த பல நாட்களாக, குடியுரிமை (திருத்தம்) சட்டம்  தொடர்பாக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த ஆர்ப்பாட்டங்கள்  தற்செயலானவையா? இது தற்செயலானது அல்ல, இது ஒரு பரிசோதனையாகும். இந்த  ஆர்ப்பாட்டங்களுக்குப் பின்னால், தேசிய நல்லிணக்கத்திற்கு தீங்கு  விளைவிக்கும் ஒரு அரசியல் வடிவமைப்பு உள்ளது.பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் நிலுவையில் இருந்த  பிரச்னைகளுக்கு பாஜ அரசு தீர்வுகளை கண்டு வருகிறது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தி வழக்கு தீர்ப்பு ஆகியவை பாஜ அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் வந்ததாகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags : Modi CAA ,protests ,CAA , CAA protests, harmony, Prime Minister, Modi,Critique
× RELATED சிஏஏ சட்டம் நடைமுறைக்கு வந்தது முதல்...