×

விதிமீறி அமைக்கப்பட்ட திரையரங்கு விவகாரம்: கலெக்டர், கமிஷனர், மாசு கட்டுப்பாட்டு அதிகாரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: விதிமீறி அமைக்கப்பட்ட தியேட்டர் விவகாரத்தில் சென்னை கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாசு கட்டுப்பாட்டு அதிகாரி கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. விதிமீறல் இருக்கும் பட்சத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.தியாகராஜன். மீனவர் நலச்சங்க தலைவர். இவர், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனுவில்:
ராயபுரம் சூர்யநாராயண செட்டி தெருவில் செயல்பட்டு வரும் சினிமா தியேட்டர் அருகே 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் அரசு பள்ளி உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஏராளமான குடியிருப்புகளும், மாநகராட்சி பூங்காவும் இருக்கிறது. அதிக ஒலி எழுப்பக்கூடிய இயந்திரம் தியேட்டரில் பொருத்தப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள் பாடத்தில் கவனம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.

பள்ளி முன்பும், மாநகராட்சி பூங்கா, இ-டாய்லெட் ஆகியவற்றை வழிமறித்தும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. புதிய படங்கள் வெளியாகும் போது அதிக சத்தத்துடன் கூடிய பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன. இதன் காரணமாகவும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். தியேட்டரில் அமைக்கப்பட்டுள்ள குளிர்சாதன எந்திரத்தில் இருந்த வெளியேறும் வெப்பம் காற்றால் மாசு ஏற்படுவதை தடுக்க தேவையான எந்திரம் பொருத்தப்படவில்லை. கழிவுநீர் குழாய் மற்றும் தொட்டி முறையாக அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. தியேட்டரில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடிநீரில் கலக்கிறது. எனவே, தியேட்டர் நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.ராமகிருஷ்ணன், உறுப்பினர் சாய்பால்தாஸ் குப்தா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் மகேசுவரன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த தீர்ப்பாயம் மனுதாரரின் புகாரை கவனத்தில் கொள்ள மாவட்ட கலெக்டர், சென்னை நகர போலீஸ் கமிஷனர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோரை கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இந்தக்குழு மனுதாரரின் புகாரை பரிசீலித்து தற்போதைய நிலை குறித்தும், ஏதேனும் விதிமீறல் இருக்கும் பட்சத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், ஒலி மற்றும் நீர் மாசுவை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Tags : Pollution Control Officer ,Collector , Collector, Commissioner, Pollution Control, Green Tribunal
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...