×

கேங்மேன் பணி நியமன நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு மின்துறை கேங்மேன் பணிக்கான நியமனத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு தொடர்பான மனு மீது லஞ்ச ஒழிப்பு துறை உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. அதன் அடிப்படையில் இந்த பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட்டது.  இதில் மின் கம்பங்களில் ஏறுதல், மின் பொருட்களை தூக்கி கொண்டு ஓடுவது போன்ற உடல் தகுதி தேர்வில் தோல்வி அடைந்த பலருக்கு பணி வழங்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் பணம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. கேங்மேன் பதவிக்கு இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 80 சதவீதம் பேர் தகுதியில்லாதவர்களாக  உள்ளனர்.
எனவே, கேங்மேன் பணிக்காக ஆட்கள் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதால் இந்த நியமனம் தொடர்புடைய மின்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு  உத்தரவிட  வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ சார்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் கொடுத்த புகார் மனுவை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிபிஐ அனுப்பியுள்ளது என்று தெரிவித்தார்.   இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, மனுதாரரின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு  லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.



Tags : Supreme Court ,bribery department ,Gangman Gangman , Gangman, Corruption Department, High Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...