×

அந்தியூர் அருகே பயங்கரம்: ஊராட்சி தலைவர் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

* தந்தை கொலைக்கு பழிவாங்கிய மகனுக்கு வலை
* சென்னை கூலிப்படையினர் 3 பேர் கைது

அந்தியூர்: அந்தியூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, சென்னை கூலிப்படையை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக சின்னதங்கம் என்ற ராதாகிருஷ்ணன் (49) என்பவர் கடந்த உள்ளாட்சி ேதர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த மாதம் 6ம் தேதி இவர் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். அ.தி.மு.க. பிரமுகரான இவர், அந்தியூர் அருகே உள்ள மூலக்கடை என்ற இடத்தில் நேற்று காலை இரு சக்கர வாகனம் பழுதுபார்க்கும் கடையில் தனது பைக்கை பழுது பார்த்துக்கொண்டு இருந்தார். அப்போது, காரில் வந்த மர்ம நபர்கள் 4 பேர், இறங்கி ராதாகிருஷ்ணனை ஓடஓட விரட்டி நடுரோட்டில் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில்,  அவருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி விழுந்தார்.

அப்பகுதியினர் அவரை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே ராதாகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். கொலையாளிகளை பிடிக்க அந்தியூர் போலீசார், மற்ற காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுத்தனர். இதற்கிடையே, கொலையாளிகள் வந்த காரை கவுந்தப்பாடி போலீசார் சலங்கபாளையம் பகுதியில் துரத்திப் பிடித்தனர். அப்போது, காரில் இருந்த 4 பேரில் ஒருவர் தப்பினார். 3 பேரை பிடித்தனர். அவர்கள் சென்னை, பல்லாவரத்தில் வசித்துவரும் மதுரை மாவட்டம், ஈ.பி.காலனியை சேர்ந்த சரவணன் (25), பல்லாவரத்தை சேர்ந்த பாலமுருகன் (30), ராஜேஷ் (26),  கூலிப்படையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 2013ல் சேகர் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாக ராதாகிருஷ்ணன் இருந்தார். இதனால், சேகரின் மகன் அரவிந்த் தனது தந்தையை கொன்ற ராதாகிருஷ்ணனை பழிக்குப்பழி வாங்க 7 ஆண்டுகளுக்குப் பிறகு கூலிப்படையை ஏவி இந்த கொலையை செய்திருப்பது தெரிந்தது. கூலிப்படையில் தப்பி ஓடியவர் சிவா என்பது தெரியவந்துள்ளது. அவரையும், அரவிந்தனையும் போலீசார் தேடி வருகின்றனர். நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன், சில ஆண்டுகளுக்கு முன்பு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : Anthiyur ,Panchayat leader ,Terror , Anthiyur, panchayat leader, Vettikolai
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 70.58 சதவீதம் வாக்குகள் பதிவு