×

ராஜிவ் காந்தி அல்ல ராஜிவ் பெரோஸ் கான்: சர்ச்சை கிளப்பிய பாஜ எம்பி

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பெயர் ராஜிவ் பெரோஸ் கான் என்றும், இந்திரா காந்தி முஸ்லிமாக மதம் மாறியவர் என்றும் பாஜ எம்பி பர்வேஸ் வர்மா மக்களவையில் பேசினார். மேற்கு டெல்லி மக்களவை தொகுதி பாஜ எம்.பி. பர்வேஸ் வர்மா. இவர் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். சமீபத்தில், டெல்லியில் பிரசாரத்தில் ஈடுபட்ட இவர், டெல்லி முதல்வரை கெஜ்ரிவால் என்று விமர்ச்சித்ததுடன், மதரீதியாகவும் பிரசாரம் செய்தார். இதனால் தேர்தல் ஆணையம் அவரது பிரசாரத்துக்கு 4 நாள் தடை விதித்தது.  இந்நிலையில், மக்களவையில் நேற்று பர்வேஸ் வர்மா, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:
எதிர்க்கட்சிகள் ஓட்டு வங்கி அரசியலை நடத்துகிறார்கள். இதனால்தான் சிஏஏ.வை எதிர்க்கிறார்கள்.

அரசியல் சட்ட புத்தகத்தில் கிருஷ்ணர் மற்றும் அனுமார் படங்கள் இடம்பெற்றுள்ளன. ஜெய் ராம் என்பது வெறும் மத கோஷம் அல்ல. அது நமது கலாச்சாரம். இதனால் உறுப்பினர்கள் அனைவரும் ஜெய் ராம் என்று கோஷமிட வேண்டும் (அவரது வேண்டுகோள் படி உறுப்பினர்கள் கோஷமிட்டனர்). சிஏஏ.வுக்கு எதிராக போராடுபவர்கள், இந்தியாவில் இருந்து அசாம், ஜம்மு காஷ்மீரை பிரித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இங்கு நடப்பது ராஜிவ் பெரோஸ்கான் ஆட்சி அல்ல. நரேந்திர மோடியின் ஆட்சி.  
இந்திரா காந்தி பெரோஸ் கான் என்ற முஸ்லிமை திருமணம் செய்து கொண்டார். இதனால் அவரும் முஸ்லிமாக மதம் மாறினார். பின்னர் ஜவகர்லால் நேரு குடும்பத்து பாரம்பரியத்தை காட்டிக் கொள்வதற்காக காந்தி என்று தனது பெயருக்கு பின்னால் சேர்த்துக் கொண்டார். எனவே, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் பெயர், ராஜிவ் பெரோஸ்கான் என்பது சரியானது என்றார். அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்திருந்ததால், அப்போது அவையில் அமளி ஏற்படவில்லை.

Tags : Rajiv Gandhi ,BJP , Rajiv Gandhi, Rajiv Perros Khan, BJP MP
× RELATED ஷர்மிளா தற்கொலை விவகாரம்:...