×

ராஜபாளையம் அருகே வைக்கோல் தீயில் எரிந்து நாசம்

ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பொன்னையா முதலியார் தெருவை சேர்ந்தவர் சுந்தரம். விவசாயி. சில தினங்களுக்கு முன்பு இவரது வயலில் ெநல் அறுவடை நடந்தது. அறுவடைக்கு பின்னர், சேத்தூர் காவல் நிலையம் அருகே உள்ள களத்தில் வைக்கோலை சேமித்து வைத்திருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் இந்த வைக்கோல் படப்பில் திடீரென தீ பற்றியது.

அருகில் இருந்தவர்கள் சேத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தீ அணைப்பு நிலைய அதிகாரி ஜெயராம் தலைமையிலான வீரர்கள் சம்பவ  இடத்திற்கு விரைந்தனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், வைக்கோலில் பற்றியெரிந்த தீயை வீரர்கள் அணைத்தனர். இதனால் அருகில் இருந்த  மற்ற வைக்கோல் படப்புகளில் தீ பரவுவது தடுக்கப்பட்டது.

இருப்பினும் இந்த விபத்தில் ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. அருகில் மின் கம்பிகள் எதுவும் இல்லாததால்,  வைக்கோல் படப்புக்கு யாரேனும் தீ வைத்திருக்கலாமா என்ற கோணத்தில் சேத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த தீ விபத்து சம்பவத்தால்  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : straw fire ,Rajapalayam Rajapalayam ,fire , Fire at straw fire near Rajapalayam
× RELATED ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் பிளாஸ்டிக் கிடங்கில் தீ விபத்து