×

சேடபட்டி பகுதியில் நலிவடைந்து வரும் இரும்பு பட்டறை தொழில்

பேரையூர்: சேடபட்டி ஒன்றியத்தில் இரும்பு பட்டறை தொழில் நலிவடைந்து வருகிறது. மதுரை மாவட்டம் சேடபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னக்கட்டளை. இந்த கிராமத்தில் விவசாய உபகரணங்கள் தயாரிக்கும் ஏராளமான இரும்பு  பட்டறை குடிசை தொழிலாக இருந்தது. சேடபட்டி பகுதியிலுள்ள காளப்பன்பட்டி, அழகுரெட்டிபட்டி, பெருங்காமநல்லூர், கன்னியம்பட்டி, சின்னக்கட்டளை, சேடபட்டி, குப்பல்நத்தம், ஜம்பலப்புரம், ஆவல்சேரி, ஆண்டிபட்டி, செட்டியபட்டி, பெரியகட்டளை, அதிகாரிபட்டி, எ.கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் சின்னக்கட்டளையில் உள்ள இரும்பு பட்டறையில் தங்களது விவசாய உபகரணங்களை பட்டைத்தீட்டி செல்வர்.

மேலும் உழவுமாடுகளுக்கு லாடமும் கொள்ளுப்பட்டறையில் தயாரிக்கப்படும். மேலும் பழைய இரும்பு பொருட்களை கொடுத்து தங்களுக்கு தேவையான விவசாய உபகரணங்களை வடிவமைத்து வாங்கி செல்வர். இப்பகுதியில் மழை பொய்த்து வருவதால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு பிழைப்புத்தேடி சென்று விட்டனர். விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாறி வருகின்றன. விவசாயத்திற்கு பயன்படும் மண்வெட்டி, கடப்பாறை, கோடாரி, களை எடுக்கும் கொத்துவான், கதிர்அரிவாள், அரிவாள் போன்றவைகளின் பயன்பாடு குறைந்துவிட்டது.

பெரும்பாலானோர் மாற்றுத்தொழிலுக்கு சென்றுவிட்டதால் இரும்பு பட்டறை தொழிலும் நலிவடைந்து விட்டது. தற்போது ஒருவர் மட்டுமே சின்னக்கட்டளையில்  கொள்ளுப்பட்டறை நடத்தி வருகிறார். இதுகுறித்து சின்னக்கட்டளையில் கொள்ளுப்பட்டறை நடத்தி வரும் முத்தையா கூறுகையில், ‘இரும்பு பட்டறை தொழிலுக்கு வரவேற்பு இல்லை. பட்டறை தொழிலில் ஈடுபட்ட பலர் தச்சு வேலைகளுக்கு சென்று விட்டனர்.

இரும்பு பட்டறை வேலைகளுக்கு யாரும் முன்வருவதில்லை. இருக்கின்ற இந்த தொழில் எத்தனை நாளைக்கு என்பதை காலம்தான் தீர்மானிக்க வேண்டும்.
குல தொழில் என்பதால் நான் மட்டுமே இப்பகுதியில் இத்தொழிலை செய்து வருகிறேன். இத்தொழிலை எங்களது குடும்பம் மூன்று தலைமுறையாக செய்து  வருகிறது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப எனது வருமானம் இல்லை. தொழிலை விரிவாக்கம் செய்யவும் நிதியில்லை. நலிவடைந்த பட்டறை தொழிலை மீட்க அரசு நிதியுதவி வழங்க வேண்டும்’ என்றார்.

Tags : area ,Sedapatti , Iron Works in the Sedapatti area
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...