×

போதிய பஸ்கள் வராமல் டிமிக்கி: நெல்லையில் `காத்து’ வாங்குது ஆம்னி பஸ் நிலையம்...கூடுதல் வசதிகள் செய்துதர நடவடிக்கை எடுக்கப்படுமா?

நெல்லை: மாநகரில் அதிகரித்துள்ள போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய பஸ் நிலையம் அருகே கட்டப்பட்ட நெல்லை மாநகராட்சி பஸ் நிலையத்திற்குள் குறைந்த அளவிலான பஸ்களே வருகின்றன. எனவே இங்கு அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் முழுமையாக இடிக்கப்பட்டு 79 ேகாடி ரூபாய் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டுக்கு மேலாக இப்பணி மந்த கதியில் நடக்கிறது. இதன் காரணமாக பொருட்காட்சி மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையம் செயல்படுகிறது. சந்திப்பு பழைய பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஆம்னி பஸ்கள் வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் செல்லப்பாண்டியன் மேம்பாலம் தொடங்கும் இடம் அருகே இருந்து புறப்பட்டன.

 இந்தப்பகுதியில் தாழையூத்து, தச்சநல்லூர் மார்க்கமாக செல்லும் நகர பஸ்களும் புறப்பட்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இப்பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க வேய்ந்தான்குளம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள காலியிடத்தில் மாநகராட்சி சார்பில் ஆம்னி பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. இதற்கு ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் வந்தாலும் மாநகராட்சி சார்பில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து இந்த ஆம்னி பஸ் நிலையத்தில் காம்பவுன்டு வளாகம், தார்தளம், பயணிகள் காத்திருப்பு அறை, கழிப்பறை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பஸ் நிலையம் வளாகம் முழுவதும் தார்தளம் அமைக்கப்படவில்லை.

இந்த ஆம்னி பஸ் நிலையம் அமைக்கப்பட்ட பின்னர் அனைத்து ஆம்னி பஸ்களும் வந்து செல்லும் இடமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தப்படி ஆம்னி பஸ்கள் இந்த பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை. நெல்லை மட்டுமின்றி குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான ஆம்னி பஸ்கள் நெல்லையில் இருந்து செல்கின்றன. ஆனால் இந்த புதிய ஆம்னி பஸ் நிலையத்தில் நாள்தோறும் தோராயமாக 30க்கும் மேற்பட்ட பஸ்களே அதுவும் குறிப்பிட்ட தனியார் ஆம்னி பஸ் நிறுவன பஸ்கள் மட்டும் வந்து செல்வதாக கூறப்படுகிறது. இதற்குள் வந்து செல்ல மாநகராட்சிக்கு குறிப்பிட்ட தொகையை தினமும் கட்டணமாக செலுத்தவேண்டும் என்பதால் இதற்கு டிமிக்கி கொடுப்பதற்காக ஆம்னி பஸ்கள் மாற்று பாதையில் செல்வதாக கூறப்படுகிறது.

இதுதவிர இந்த பஸ் நிலையத்தில் உணவகம் போன்ற வசதிகள் இல்லை. கூடுதல் கழிப்பறை வசதி இல்லை. போலீஸ் பூத் இருந்தாலும் அங்கு காவலர்களை காணமுடிவதில்லை என்பது போன்ற காரணங்களும் கூறப்படுகின்றன. அனைத்து ஆம்னி பஸ்களும் இங்கு வரமறுப்பதால் அந்த பஸ்களுக்கு புக் செய்த பயணிகள் தங்கள் பஸ் வரும் இடம் தேடி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆம்னி பஸ் நிலையத்திற்குள் வராவிட்டாலும் பெரும்பாலான ஆம்னி பஸ்கள் இப்போதும் வண்ணார்பேட்டை வடக்கு பைபாஸ் சாலையில் நின்று செல்கின்றன. சில நேரங்களில் முன்பதிவு பயணிகளை குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து பஸ்சில் ஏற்றி செல்கின்றனர். இந்த குளறுபடிகள் மாறுவதற்கு மாநகராட்சி ஆம்னி பஸ் நிலையத்தில் அனைத்து பஸ்களும் வந்து செல்ல உணவகம் மற்றும் கூடுதல் காத்திருப்பு அறை,  கழிப்பறை, இலவச ‘ஒய்பை’ உள்ளிட்ட வசதிகளை மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கவேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : bus station ,facilities ,paddy field , Inadequate buses Dimicky: Waiting in the paddy field ’Omni bus station ... Extra facilities to take action?
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்