×

பிராய்லர் கோழி முட்டைக்கு சாயம் பூசி நாட்டுக் கோழி முட்டை என விற்பனை: 3,900 முட்டைகள் அழிப்பு

கோவை: பிராய்லர் கோழி முட்டைக்கு சாயம்பூசி நாட்டுக்கோழி முட்டை என்று விற்கப்பட்ட மோசடி கண்டுபிடிக்கப்பட்டது.கோவை மாநகர பகுதிகளில் உள்ள மீன் மார்க்கெட், காய்கறி மார்க்கெட் பகுதிகளில் பிராய்லர் கோழி முட்டைகளை சாயம் பூசி நாட்டுக்கோழி முட்டைகள் என விற்பனை செய்யப்படுவதாக உணவுத்துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார் வந்தது. இதன் அடிப்படையில், மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் 6 சிறப்பு குழு அமைத்து நேற்று காலை 6 மணி முதல் உக்கடம் மீன் மார்க்கெட், லாரி பேட்டை மீன் மார்க்கெட், சிங்காநல்லூர் உழவர் சந்தை, ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தை, வடவள்ளி உழவர் சந்தை, மேட்டுப்பாளையம் ரோடு எம்.ஜி.ஆர் மார்க்கெட், அண்ணா மார்க்கெட் பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.

சேலம், நாமக்கல் பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பிராய்லர் கோழி முட்டைகளுக்கு சாயம் பூசி நாட்டு கோழி முட்டைகள் என விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் 10 பேரிடம் இருந்த 3,900 முட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்செல்வன் கூறுகையில், ‘’10 பேரிடம் இருந்து 3,900 சாயமேற்றிய முட்டைகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இது போன்ற முட்டைகளை விற்பனை செய்ய கூடாது என எச்சரிக்கப்பட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. சாயம் பூசப்பட்ட முட்டைகளை தண்ணீரில் போட்டு கண்டுபிடிக்க முடியும். பொதுமக்கள் நாட்டுக்கோழி முட்டைகளை வாங்கும்போது விழிப்புடன் இருக்க வேண்டும்’ என்றார்.

Tags : Broiler Chicken Egg Dyed Chicken Egg Selling: 3,900 Egg Destruction
× RELATED காணாமல் போன நெல்லை கிழக்கு மாவட்ட...