×

தனுஷ்கோடி கடலோரப் பகுதியில் 452 ஆமை முட்டை சேகரிப்பு

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடலில் ஆமைகள் முட்டையிடும் காலம் துவங்கிய நிலையில், தனுஷ்கோடி கடலோர பகுதியில் மணலில் 452 ஆமை முட்டைகள் வனத்துறையால் சேகரிக்கப்பட்டது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடல் ஆமைகள் பிப்ரவரி மாதம் துவங்கி தொடர்ந்து நான்கு மாதங்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக தனுஷ்கோடி, முகுந்தராயர்சத்திரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளுக்கு வந்து மணலில் முட்டையிட்டு செல்லும். மன்னார் வளைகுடா கடலில் ஆமைகள் முட்டையிடும் காலம் துவங்கியதால், நேற்று அதிகாலை தனுஷ்கோடி தென்கடல் பகுதியில் கரைக்கு வந்த ஆமை ஒன்று மணலில் குழி தோண்டி முட்டையிட்டு சென்றது.

இப்பகுதி மீனவர்கள் இதுபற்றி வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின பாதுகாப்பு வனத்துறை அதிகாரி வெங்கடேஷ் தலைமையில் வனவர் ஆனந்த் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று காலை தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் 4 இடங்களில் மணலுக்குள் புதைந்திருந்த 452 ஆமை முட்டைகளை மீட்டனர். பின் வனத்துறையால் சேகரிக்கப்பட்ட ஆமை முட்டைகள் முகுந்தராயர்சத்திரம் கடற்கரையில் அமைந்துள்ள ஆமை முட்டை பொறிப்பக மையத்தில் குஞ்சு பொறிப்பதற்காக மணல் குழிகளுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

Tags : Dhanushkodi Coast , Dhanushkodi Coastline, Turtle Egg
× RELATED எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி...