×

முத்துப்பேட்டையில் உழவர் சந்தை மீண்டும் பயன்பாட்டிற்கு வருமா?... பொதுமக்கள் எதிர்பார்ப்பு

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை குமரன் கடைதெரு அருகே பேரூராட்சி சார்பில் வாரச்சந்தை ஒன்று வியாழன் தோறும் செயல்பட்டு வருகிறது. இதன் அருகே திமுக ஆட்சியில் திறக்கப்பட்ட உழவர் சந்தையும் உள்ளது. இதனை திருவாரூரில் உள்ள வேளாண் விற்பனைக்குழு நிர்வகித்து வருகிறது. கிராம பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த பணப்பயிர்கள் கீரை காய்கறிகள் ஆகியவற்றை இடைதரகர்களின்றி நேரடியாக விற்பனை செய்வதற்காக இந்த சந்தைதிறப்பு விழா கண்டது.தினசரி இயங்கும் வகையில் திறக்கப்பட்ட இந்த உழவர் சந்தையால் இப்பகுதியினர் பெரும் அளவில் பயனடைந்தனர்.. உழவர்சந்தையால் விவசாயிகளும் பொதுமக்களும் ஒருசேர பயனடைந்தனர். பேரூராட்சியின் வாரச்சந்தையில் கூடுதல் விலைவைத்து லாபம் கொழிக்கும் வெளியூர் வியாபாரிகள் உழவர் சந்தையை முடக்கி அந்த வியாபாரத்தை ஆக்கிரமித்தனர்.

காய்கறி பொருட்களின் விலையும் உயர்ந்தது. இதனையடுத்து பொதுமக்கள் வருகையும் குறைந்ததால் உழவர் சந்தை நாளடைவில் மூடுவிழா கண்டுவிட்டது. இதனால் சுமார் 9ஆண்டுகளுக்கு மேலாக செயல்படாமல் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வேளாண் விற்பனைக்குழு நிர்வாகிகள் உழவர் சந்தையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாக கூறி விவசாயிகளை அழைத்து இங்கு கருத்தரங்கம் நடத்தி அடையாள அட்டைகள் ஆலோசனைகள் வழங்கினர். அன்றோடு அந்த நிகழ்வு முடிந்தது அதன் பிறகு யாரும் எட்டிகூட பார்க்கவில்லை. இதனால் சுமார் 9ஆண்டுகளுக்கும் மேலாக பு+ட்டியே கிடக்கும் உழவர்சந்தையின் தற்போதைய நிலை பரிதாப கோலத்தை எட்டியுள்ளது. வியாபார கடைகள் கட்டடங்கள், கழிப்பிடங்கள் சிதிலமடைந்து வீணாகி வருவதுடன் கட்டிடங்களிலும் சந்தைவளாகம் முழுவதும் புல்புதர் மண்டிகிடக்கிறது. சமீபத்தில் கஜா புயலின் கோரதாண்டவத்திற்கும் பலியாகி அங்குள்ள மரங்கள் சேதமாகிவிட்டது.

இதனால் களையிழந்து மூடு விழா கண்ட இந்த உழவர் சந்தையை மக்கள் பயனுக்காக மீண்டும் திறந்து பயனுக்கு தரவேண்டுமென இப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து திமுக ஆட்சியில் உழவர் சந்தை வர பெரும் முயற்சி மேற்கொண்ட முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவரும் திமுக மாவட்ட துணைச் செயலாளருமான எம்.எஸ்.கார்த்திக் கூறுகையில்: வேளாண் விற்பனைக்குழு நிர்வாகிகள் இனியாவது கருத்தில்கொண்டு துரித நடவடிக்கையை மேற்க்கொள்ள வேண்டும் என்றார். இதுகுறித்து காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சதீஸ்குமார் கூறுகையில்: இந்த உழவர் சந்தையால் மக்களுக்கு எந்தளவுக்கு பயனாக அமைந்தது மட்டுமின்றி உற்பத்தி செய்யும் சிறுகுறு விவசாயிகளுக்கும் மிகவும் பயனாக இருந்தது. இதனை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து மீண்டும் இந்த உழவர் சந்தையை செயல்பட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.இந்நிலையில் சமீபகாலமாக பூட்டிக்கிடக்கும் இந்த உழவர் சந்தை வாசலை ஆக்கிரமித்து ஒருவர் காய்கறி கடை வைத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்த சந்தைக்கு அவரே ஒரு பூட்டு போட்டு உள்ளே கடையின் பொருட்களை வைத்து குடோனாக பயன்படுத்தி வருகிறார் இது அப்பகுதி மக்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

Tags : Muthupettai, tiller market
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்.4-ம் தேதி வரை நீடிப்பு!