×

பாசி படர்ந்து காணப்படுகிறது பச்சை நிறத்தில் மாறிய வைகை தண்ணீர்: திருப்புவனத்தில் நீராடும் பக்தர்கள் அவதி

திருப்புவனம்:  திருப்புவனம் பகுதி வைகை ஆற்று நீரில் பச்சைப் பசேல் என பாசி  படர்ந்து இருப்பதால் நீராடும் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர். வருசநாடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் வைகை ஆறு திருப்புவனம் வழியாக புண்ணிய நதியாக செல்கிறது. திருப்புவனம் ஆற்றில் இறந்தவர்களின் அஸ்தி கரைப்பது, ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு  திதி, தர்ப்பணம் கொடுப்பது போன்ற சடங்குகள் நடந்து வருகின்றன. அதன் பின்னர் வைகை ஆற்றில் நீராடுவது புண்ணியமாக கருதப்படுகிறது. திருப்புவனத்தில் அருப்புகோட்டை கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளில் நிலத்தடி நீரை மேம்படுத்த தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த மாதம் வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் ஆற்றில் நீரோட்டம் உள்ள நிலையில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

வைகை ஆற்றில் தண்ணீர் வராத நிலையில் மதுரை மாவட்ட கழிவுநீர் முழுவதும் வைகையில் கடந்து வந்து திருப்புவனம் தடுப்பணையில் நிரம்பி துர்நாற்றம் வீசி வருகிறது. சாக்கடை நீர் நிரம்பியுள்ளதால் தடுப்பணையில் உள்ள தண்ணீர் முழுவதும் பாசி படர்ந்து பச்சை நிறத்தில் மாறியுள்ளது. திதி, தர்ப்பணம் வழங்க வருகை தரும் பக்தர்கள் இத்தண்ணீரில் நீராடியபின் தோல் அரிப்பு, தோல் சிரங்கு உள்ளிட்ட நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். உள்ளூர் நபர்கள் யாரும் ஆற்றில் நீராடுவது இல்லை, வெளியூர் பக்தர்கள் தெரியாமல் ஆற்றில் நீராடியபின் முகம் சுளித்தபடி திரும்பி செல்கின்றனர். தடுப்பணையில் கழிவு நீர் நிரம்பி இருப்பதால் தடுப்பணையை ஒட்டியுள்ள திருப்புவனம், அருப்புக்கோட்டை கூட்டு குடிநீர் திட்ட கிணறுகளிலும் கழிவுநீர் கலந்து வருகிறது.

மக்கள் கூறுகையில், திருப்புவனத்தில் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் துர்நாற்றம் வீசி வருவதால் பொதுமக்கள் யாரும் பயன்படுத்துவதில்லை. தடுப்பணை தண்ணீர் கடந்த 10 நாட்களாக பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுவதால் சுற்றுவட்டார ஆழ்துளை கிணறுகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  கழிவு நீர் நிரம்பி இருப்பதால் தடுப்பணையை ஒட்டி உள்ள எம்ஜிஆர் நகர், ஆண்கள், பெண்கள் பள்ளி மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் துர்நாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம்  முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே விபரீதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் பாசி படர்ந்துள்ள கழிவு நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Vaigai , Pasi, Vaigai Water, Devotees Avadhi
× RELATED தேனி நாடாளுமன்றத் தொகுதி மக்களுக்கு...