×

திருப்புவனம் பகுதியில் பயிர்களை நாசமாக்கும் காட்டுப்பன்றிகள்: பரண் அமைத்து காவல் காக்கும் விவசாயிகள்

திருப்புவனம்:  திருப்புவனம் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாய நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்ட விவசாயிகள் பரண் அமைத்து 24 மணி நேரமும் காவல் காத்து வருகின்றனர். கடந்த நவம்பர் மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையை நம்பி திருப்புவனம் வட்டாரத்தில் கீழராங்கியன், அல்லிநகரம், வடகரை, மடப்புரம்,  பழையனூர்,  வயல்சேரி  பகுதிகளில்  நடவு பணிகள் நடந்து வருகின்றன. பெரும்பாலான விவசாயிகள் 120 நாள் பயிரான என்எல்ஆர், கல்சர் பொன்னி உள்ளிட்ட நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளனர். விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் தற்போது பால் பிடித்து வருகின்றன. கதிர்கள் வளர்ந்துள்ள நிலையில் இன்னும் ஒருசில நாட்களில் அறுவடை செய்ய உள்ளனர். இந்நிலையில் விவசாய நிலங்களில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக இறங்கி பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

பயிர்களை வேருடன் பிடுங்கி விடுவதாலும் வாழை, கரும்பு  ஆகியவற்றை சேதப்படுத்துவதாலும் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர். விவசாயிகள் பலரும் ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்து இரவு பகலாக தண்ணீர் பாய்ச்சி விளைச்சலுக்கு கொண்டு வந்த நிலையில் காட்டுப்பன்றிகளால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. காட்டுப்பன்றிகள் தொல்லை குறித்து வனத்துறைக்கு புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வரும் காட்டுப்பன்றிகள் சாலையில் செல்லும் வாகனங்களையும் பொதுமக்களையும் தாக்கி காயப்படுத்துகின்றன. விவசாயிகள் காட்டுப்பன்றிகளிடம் இருந்து நெற்பயிர்களை பாதுகாக்க வயல்களில் பரண் அமைத்து இரவு பகலாக காவல் காத்து வருகின்றனர்.

கீழராங்கியன் விவசாயி முத்து கூறுகையில், அதிகாலை இரண்டு மணிக்கு மேல் காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. கடந்தாண்டு வரை காட்டுப்பன்றிகள் பிரச்சனை இல்லை. இந்தாண்டுதான் பன்றிகள் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
காட்டுப்பன்றிகளை விரட்ட முடியவில்லை. அவைகள் காவலில் இருக்கும் விவசாயிகளையும் தாக்கி காயப்படுத்துகின்றன. சமீபத்தில் ரோட்டில் சென்ற ஆட்டோவை முட்டி கவிழ்த்துவிட்டன. எனவே காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கன்றுக்குட்டி உயரம்
பிரமனூர் கண்மாயில் இருந்த பன்றிகள் பலவும் சமீபத்தில் கண்மாயில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டதால் மற்ற கண்மாய்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டன. கன்றுக்குட்டி உயரத்தில் இருக்கும் இவை கூட்டம் கூட்டமாக வருவதுடன் விரட்ட முயலும் விவசாயிகளையும் மூர்க்கத்துடன் தாக்கி காயப்படுத்தி வருகின்றன. எனவே மாவட்ட வனத்துறை காட்டுப்பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : area ,Thiruppvanam , Thripavanam, crop, wild boar
× RELATED குஜராத் ராஜ்கோட் பகுதியில் வணிக வளாக...