மலேசியாவில் இருந்து சென்னை வந்த சீன பயணிக்கு கொரோனா வைரஸ் அறிகுறி: தனி வார்டில் சிகிச்சை

சென்னை: சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக இதுவரை 304 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் கடந்த20ம் தேதி நள்ளிரவிலிருந்து மத்திய சுகாதாரத்துறையினர் ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை தொடர்ந்து சோதனை நடத்தி அனுப்புகின்றனர். முதலில் மூன்று கவுன்டர்களுடன் தொடங்கப்பட்ட சோதனை தற்போது 10 கவுன்டர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. அதோடு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேசும் நேரடியாக பார்வையிட்டு கொரோனா வைரஸ் சோதனையை மேலும் விரிவுபடுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் சுமார் 5000 பயணிகளுக்கு மேல் சோதனை நடத்தப்பட்டுள்ளனர். இதில், 575 பேரை சந்தேகத்தின் பேரில் தனி இடத்தில் வைத்து தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.40 மணிக்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது.

அதில் 239 பயணிகள் வந்தனர். அவர்களை  மத்திய சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதணை நடத்தினர். அப்போது சீனா நாட்டை சேர்ந்த லுவிஜின் (46) என்ற பயணியை பரிசோதித்தனர். அப்போது அவருக்கு கடுமையான காய்ச்சல், இருமல், சளி இருந்தது. சந்தேகத்தின்பேரில் அவரை வெளியில் அனுப்பாமல் தனிமை படுத்தி நிறுத்திவைத்தனர். உயர் மருத்துவக் குழுவினர் தீவிர மருத்துவ பரிசோதனை நடத்தினர். அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதற்கான அறிகுறி தெரியவந்தது. உடனடியாக அவருக்கு முகமூடி, கையுறை கவசம், உடல் கவசம் அணிவித்து சிறப்பு தனி ஆம்புலன்ஸ் மூலமாக நேற்று அதிகாலை சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனாவுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு வார்டில் சேர்த்தனர், அங்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் முழுமையாக பரிசோதித்து தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

அதோடு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனையிலேயே அவரது ரத்த பரிசோதனை முடிவு வரும்வரை அவர் தீவிர கண்காணிப்பில் இருப்பார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. சீனப்பயணி லுவிஜின் கொரோனா வைரஸ் பாதித்திருப்பதற்கான அறிகுறி இருப்பதாக சீன நாட்டு தூதரகத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர். விசாரணையில் இவரும் இவரது நண்பர்கள் 6 பேர் உட்பட ஒரு குழுவாக சீனாவில் இருந்து ஹாங்காங் வந்து ஹாங்காங்கில் இருந்து சுற்றுலா பயணியாக மலேசியா நாட்டுக்கு சென்றுள்ளனர். மலேசியா நாட்டில் இருந்து தற்போது இந்தியாவுக்கு வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருடன் நண்பர்களாக வந்த 6 பேரையும் தீவிர சோதனை நடத்தினர். அவர்கள் யாருக்கும் எந்தவித நோய் பாதிப்பும் இல்லை என்று தெரிந்ததால் அவர்களை அனுப்பிவிட்டனர்.

* மதுரை வாலிபருக்கு கொரோனா?

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு நேற்று அதிகாலை ஸ்கூட் விமானம் வந்தது. இதில் வந்த மதுரை மாவட்டம் மேலூர் மணல்மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் அருண் (27) என்பவருக்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது. அவரை உடனே திருச்சி அரசு மருத்துவமனை கொரானா காய்ச்சல் சிறப்பு வார்டில் சேர்த்தனர். இதுகுறித்து, டீன் வனிதா கூறுகையில், ‘முதற்கட்ட பரிசோதனையில் எந்தவித அபாய அறிகுறிகள் இல்லை என கண்டறியப்பட்டுள்ளது. 2 நாட்களில் காய்ச்சல் சரியாகிவிடும் என எதிர்பார்க்கிறோம்’ என்றார்.

Related Stories:

>