×

குரூப் 4, குரூப் 2ஏ தேர்வில் மெகா மோசடி விவகாரம் காவலர் முத்துவை பிடிக்க சிபிசிஐடி தீவிரம்

* ஜெயக்குமார் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம்
* தேர்வர்களிடம் ரூ.50 கோடிக்கு மேல் வசூல்

சென்னை: குரூப் 4, குரூப் 2 ஏ தேர்வில் தேர்ச்சி பெற தேர்வர்களிடம் முக்கிய குற்றவாளிகளான சித்தாண்டி மற்றும் ஜெயகுமார் ஆகியோர் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் கடந்த ஆண்டு நடந்த குரூப் 4 தேர்வில் பெரிய அளவில் மோசடி நடந்தது. இதையடுத்து, முறைகேடாக தேர்வு எழுதிய 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்து அவர்களை வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதித்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது. இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து இடைத்தரகர்கள் மூலம் தேர்வு எழுதியவர்களிடம் தலா ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணத்தை வாங்கி கொண்டு முறைகேட்டில் ஈடுபட்ட பள்ளிக்கல்வி துறை உதவியாளர், டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் முதல் தேர்வு எழுதியவர்கள் என 16 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இந்த மோசடிக்கு மூளையாக செல்பட்டு தற்போது தலைமறைவாக உள்ள சென்னை முகப்பேரை சேர்ந்த ஜெயகுமாரை சிபிசிஐடி போலீசார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர். அதேநேரம் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் உதவி ஆய்வாளர் சித்தாண்டியையும் சிபிசிஐடியின் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இருவரும் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இதற்கிடையே, குரூப் 4 முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 16 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தற்போது நடந்த முறைகேடு போன்று குரூப் 2ஏ தேர்விலும் சித்தாண்டி மற்றும் ஜெயகுமார் ஆகியோர் அறங்கேற்றியது தெரியவந்தது. தற்போது சிபிசிஐடி போலீசார் ஜெயக்குமார் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு தரப்படும் என அறிவித்துள்ளனர்.

இதையடுத்து டிஎன்பிஎஸ்சி குரூப் 2ஏ முறைகேடு குறித்து உரிய ஆவணங்களுடன் 42 பேர் மீது சிபிசிஐடியிடம் கடந்த வெள்ளிக்கிழமை புகார் அளித்தனர். அந்த புகாரின் படி ராமநாதபுரம் தேர்வு மையத்தில் முறைகேடாக தேர்வு எழுதிய 37 பேர் உட்பட உதவி ஆய்வாளர் சித்தாண்டி, ஜெயகுமார், ஓம் காந்தன் உட்பட 42 பேர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.அப்போது, ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 37 பேரிடம் தலா ரூ.10 முதல் ரூ.15 லட்சம் வரை பணத்தை பெற்று கொண்டு அனைவரையும் குரூப் 4 முறைகேடு போன்று ஓடும் வாகனத்தில் விடைத்தாள்களை திருத்தி மோசடி செய்தது தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக நேற்று முன்தினம் சிபிசிஐடி போலீசார் சித்தாண்டி சகோதரன் வேல்முருகன் மற்றும் சித்தாண்டி நண்பரான காவலர் முத்துவின் மனைவி ஜெயராணியை கைது செய்தனர்.

இதற்கிடையே இந்த மோசடியில் உதவி ஆய்வாளர் சித்தாண்டி உடன் பல காவலர்களுக்கு தொடர்பு இருப்பது சிபிசிஐடி விசாரணையின் தெரியவந்துள்ளது. இதில் சித்தாண்டி மற்றும் ஜெயகுமார் ஆகியோர் தமிழகம் முழுவதும் கடந்த 8 ஆண்டுகளாக இந்த மெகா மோசடியில் ஈடுபட்டதும், குறிப்பாக குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வில் மட்டும் ரூ.50 கோடிக்கு மேல் தமிழகம் முழுவதும் இடைத்தரகர்களை அமர்த்தி வசூலித்து மெகா மோசடி செய்து இருப்பதும் தலைமறைவாக உள்ள ஜெயகுமார் வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட ஆவணங்களில் இருந்து தெரியவந்துள்ளது. இந்த மோசடி பின்னணியில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் பலர் சிக்கியுள்ளனர். அதேபோல் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலர் மோசடிக்கு உடந்தையாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட ஜெயராணியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. மோசடிக்கு சித்தாண்டிக்கு உடந்தையாக மற்றொரு ஜெயராணியின் கணவரான காவலர் முத்துவும் ஈடுபட்டிருப்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் ஜெயராணி அளித்த தகவலின் படி அவரது கணவர் முத்து இந்த மோசடியில் சிபிசிஐடி போலீசார் சேர்த்துள்ளனர். அதைதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் தலைமறைவாக உள்ள காவலர் முத்துவை கைது செய்ய தீவிரம் காட்டி வருகிறது. மேலும் பல முக்கிய நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று சிபிசிஐடி போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. சித்தாண்டி மற்றும் ஜெயகுமார் ஆகியோர் தமிழகம் முழுவதும் கடந்த 8 ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

Tags : Group 4 ,CBCID , Group 4, Group 2A, Exam, Mega Fraud, Affairs, Guard Pearl, CBCID
× RELATED ஆருத்ரா மோசடி வழக்கில் கைது...