×

பாலக்கோடு அருகே கோடை துவங்கும் முன்பே வறட்சியால் தக்காளி தோட்டத்தில் மாடுகளை மேயவிட்ட விவசாயி

பாலக்கோடு: பாலக்கோடு சுற்றுவட்டாரத்தில் கோடைக்கு முன்பே ஏற்பட்ட வறட்சியால், தண்ணீர் பாய்ச்ச முடியாமல் காய்ந்த தக்காளி தோட்டத்தில் மாடுகளை விவசாயி மேயவிட்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, சுற்றுவட்டார பகுதிகளான மல்லாபுரம், பெலமாரனஅள்ளி, 5வது மைல் கல், எக்காண்ட அள்ளி, மாரண்டஅள்ளி, ராசி குட்டை உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி பயிரிடப்பட்டு வருகிறது. விளைச்சலுக்கு பின் பாலக்கோடு சந்தை, தர்மபுரி மர்க்கெட், கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். கடந்த ஆண்டு தர்மபுரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் பருவ மழை பொய்த்து போனதால் தக்காளி உள்ளிட்ட சில காய்கறி பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பாலக்கோடு அருகே கோடைக்கு முன்பே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பயிரிட்ட காய்கறி பயிர்கள் காய்ந்து வருகிறது.  

இந்நிலையில் 5வது மைல்கல் கிராமத்தை சேர்ந்த விவசாயி செல்வம், ரூ.60 ஆயிரம் செலவு செய்து அரை ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிட்டிருந்தார். கடும் வெயில் காரணமாக கிணற்று நீர் மட்டம் குறைந்துவிட்டது. இதனால் தக்காளி பயிரிட்ட வயல்களில்  தண்ணீர் பாய்ச்ச முடியாமல் தக்காளி செடிகள் முற்றிலும் காய்ந்து விட்டன. இதனால் இதை கால்நடைகளுக்கு உணவாக விவசாயி செல்வம் விட்டு விட்டார். தற்போது தக்காளி செடிகளை கால்நடைகள் தினந்தோறும் மேய்ந்து வருகிறது.

இது குறித்து விவசாயி செல்வம் கூறுகையில், மேலும் 20 கிலோ தக்காளி பெட்டி 150 ரூபாய்க்கு விற்பதால் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றனாலும் கட்டுப்படியாகாத நிலை உள்ளது. எனவே பயிர்களை காப்பாற்ற முடியாததால் கால்நடைகளுக்கு உணவாக்கிவிட்டேன் என்றார். மேலும் தக்காளி பயிர்களை காக்க காப்பீடு தொகை வழங்க வேண்டும். அல்லது ஒகேனக்கல் நீரை குழாய்களின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு நிரப்ப வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : tomato garden ,Palakkad , Palakkad, summer, drought, tomatoes, cows, grazing farmer
× RELATED கோடை வறட்சி எதிரொலி: ஆறுகள், அணைகள் வற்றின