×

குடமுழுக்கு விழாவையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் 2, 3ம் கால யாகசாலை பூஜை

தஞ்சை: தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 5ம் தேதி காலை நடக்கிறது. கடந்த 27ம் தேதி காலை பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. அதைதொடர்ந்து சாந்தி பூஜை, வடுக யந்திர பூஜை என ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. குடமுழுக்கு விழாவுக்கான யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் மாலை தொடங்கியது. இதற்காக நேற்றுமுன்தினம் காலை தஞ்சை வெண்ணாற்றங்கரையில் இருந்து கோயிலுக்கு புனிதநீர் எடுத்து வரப்பட்டது. அந்த நீர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து யாக சாலையில் வைக்கப்பட்டது. மாலையில் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. இதற்காக 11,900 சதுர அடி பரப்பில் 110 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டது.

400க்கும் மேற்பட்ட சிவச்சாரியார்களும், ஓதுவார்களும் பங்கேற்று ஹோமங்களை நடத்தினர். நேற்று காலை 2ம் கால யாகசாலை பூஜை நடந்தது. மாலை 3ம் கால யாகசாலை பூஜை நடந்தது. இன்று 4, 5ம்கால யாகசாலை பூஜைகள் நடக்கிறது. வரும் 5ம் தேதி வரை நடைபெறும் 8 கால யாகசாலை பூஜைக்காக 1,000 கிலோ வெள்ளை மிளகு, நன்னாரி வேர், வலம்புரி காய், கர்சூரிக்காய், அதிமதுரம், லவங்கப்பட்டை, தேவதாருகட்டை போன்ற 124 மூலிகை பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் தினம்தோறும் 1,000 கிலோ அளவிலான செவந்தி, சம்மங்கி, தாமரை, ரோஜா போன்ற மலர்கள் அபிஷேகத்துக்கு பயன்படுத்தப்படவுள்ளன.


Tags : Yagasalai Pooja ,occasion ,Tanjay Periya Temple ,Thanjavur Temple , Kudumbullu Festival, Tanjore, Great Temple, 2nd and 3rd Yagasala, Puja
× RELATED திருக்கார்த்திகையை முன்னிட்டு மண்ணை...