×

மத்திய பட்ஜெட்டில் அடியோடு புறக்கணிப்பு கிடப்பில் போடப்படுகிறதா கீழடி?

* வடக்கிற்கே முக்கியத்துவம்
* தமிழக அரசும் மவுனம்

மதுரை: மத்திய பட்ஜெட்டில் கீழடி அகழாய்வுப்பணிகள் குறித்த அறிவிப்புகள் எதுவுமின்றி புறக்கணிக்கப்பட்டுள்ளது, தமிழார்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி மாதம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட ஆறாம் கட்ட அகழாய்வு பற்றி தமிழக அரசும் மவுனம் சாதிக்கிறது. மதுரை அருகே, வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கீழடியில் மத்திய அரசின் தொல்லியல் துறை 2013 முதல் 2016 வரை 3 ஆண்டுகள் நடத்திய அகழாய்வு முடிவுகள், தமிழர் நாகரீக தொன்மையை உலகுக்கு பறைசாற்றியது. கீழடி கிராமம், சிவகங்கை மாவட்டத்தில் இருந்தாலும், புராதன நகரமான மதுரைக்கு அருகே சுமார் 15 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

இங்கு நடைபெற்ற அகழாய்வில் கி.மு இரண்டாம் நூற்றாண்டு நகர நாகரீகம் இருந்ததற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டன. இந்த அகழாய்வை நடத்திய அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் வேறு ஊருக்கு தூக்கியடிக்கப்பட்டு, இன்னொரு அதிகாரி நியமிக்கப்பட்டார். அவர் பெயரளவுக்கு ஆய்வு நடத்தி விட்டு ‘மேலும் இங்கு ஆய்வு நடத்தத் தேவையில்லை’ என்று இழுத்து மூடினார். இதன் பிறகு தமிழக அரசின் தொல்லியல் துறை 2 ஆண்டுகள் அகழாய்வு நடத்தியது. 4ம் கட்ட ஆய்வில், தமிழர்கள் 2,600 ஆண்டுகளுக்கு முன் நகர நாகரீகத்துடன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் அறிவியல்ரீதியாக நிரூபணம் ஆயின.

கீழடியில் அருங்காட்சியகம் அமைத்து, அங்கு கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிக்கு வைக்க வேண்டும், அந்த பகுதியை ‘சங்ககால வாழ்விடம்’ என அறிவித்து பாதுகாக்க வேண்டும் என்று தமிழார்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழக அரசின் ஆய்வறிக்கை மத்திய தொல்லியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் தொல்லியல் துறை எவ்வித நடவடிக்கையுமின்றி மவுனம் சாதித்து வந்தது. கீழடியில் முதன்முதலில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வில் எடுக்கப்பட்ட 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் அங்கிருந்து தூக்கிச் செல்லப்பட்டு, பெங்களூரூவில் அடைத்து வைக்கப்பட்டன. அவற்றை சீல் உடைத்து எடுக்கவும், ஆய்வறிக்கை தயாரிக்கவும் பெங்களூரூவிலுள்ள மத்திய தொல்லியல் துறை அதிகாரிக்கு 4 ஆண்டுக்கு முன் அதிகாரம் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த ஆய்வறிக்கை இதுவரை வெளியாகவில்லை.

இந்தச் சூழலில், 2 நாட்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில் கீழடி அகழாய்வுப்பணிகள் குறித்து எதுவும் குறிப்பிடாமல், ஆதிச்சநல்லூரிலும் வடமாநிலங்களில் 4 இடங்களிலும் தொல்லியல் அருங்காட்சியம் அமைக்கப்படும் என்று மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கீழடி அகழாய்வை தொடராமல் இழுத்து மூட திட்டமிடப்படுகிறதோ என்ற அச்சம் தமிழ் ஆய்வாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஏற்கனவே கீழடியில் ஐந்து கட்ட ஆய்வுகள் முடிந்து, தமிழக தொல்லியல் துறை 6ம் கட்ட ஆய்வை தொடராமல் நிறுத்தியுள்ளது. 2020, ஜனவரியில் மீண்டும் அகழாய்வு தொடரும் என்று அறிவித்து கீழடியை ஒட்டிய அகரம், மணலூர், கொந்தகை ஆகிய கிராமங்களை தேர்வு செய்து தயார் நிலையில் வைத்திருந்தது. ஆனால் திட்டமிட்டபடி ஜனவரியில் அகழாய்வு தொடராமல் முடங்கி உள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் தொல்லியல் துறை பிறப்பிக்காமல் மவுனம் சாதிக்கிறது.

இதுகுறித்து தமிழ் ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு தொல்லியல் அருங்காட்சியம் அமைப்பதை வரவேற்கிறோம். அரியானா, உ.பி மகாராஷ்டிரா, குஜராத் என 4 மாநிலங்களில் அருங்காட்சியகம் அமைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்மூலம், மீண்டும் ஒருமுறை வடக்கிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வடஇந்திய ஆரிய நாகரீகத்தை விட தமிழர் நாகரீகம் காலத்தால் மிகத் தொன்மையானது என்பதற்கான ஆதாரங்களை கீழடி வெளிச்சம் போட்டு காட்டியது. இதன் காரணமாகவே, அதை மூடி மறைக்கும் நோக்குடன் மீண்டும் மண்ணுக்குள் புதைக்கும் கீழடி அரசியல் நடக்கிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தமிழக அரசும் அகழாய்வை தொடர அஞ்சுகிறதோ என்ற ஐயமும் எழுகிறது. அடுத்து கீழடி என்னாகும் என்பது கேள்விக்குறியாவது வேதனைக்குரியது’’ என்றனர். மத்திய அரசின் அழுத்தம் காரணமாக தமிழக அரசும் அகழாய்வை தொடர அஞ்சுகிறதோ என்ற ஐயமும் எழுகிறது.


Tags : Federal Budget, Failure, Neglect, Subordinate?
× RELATED பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில்...