×

மாணவர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்: எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவிப்பு

சென்னை: டெல்லி மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவித்துள்ளது. எஸ்.டிபி.ஐ.கட்சி மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்ட அறிக்கை: குடியுரிமை திருத்த சட்டம், என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக இந்தியா முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 30ம் தேதி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்தி வரும் டெல்லி ஜாமிஆ பல்கலைக்கழக மாணவர்கள், அமைதி பேரணி நடத்தத் திட்டமிட்டனர். இந்த நிலையில், மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டதில் மாணவர் சதாப் படுகாயம் அடைந்துள்ளார். இந்த தாக்குதல் பாஜக தலைவர்களின் தூண்டுதலில், டெல்லி காவல்துறையின் முழு பாதுகாப்புடனும் ஆதரவுடனும் நடந்துள்ளது. இந்த பயங்கரவாத தாக்குதலை எஸ்டிபிஐ கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

மோடி அரசின் மத்திய அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகிக்கும் அனுராக் தாகூர், பாஜக எம்.பி. ப்ரவேஷ் வர்மா ஆகியோர், சிஏஏக்கு எதிராகப் போராடுபவர்களை தேசத் துரோகிகள் என்றும் அவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்றும் வெளிப்படையாக வெறுப்புணர்வைத் தூண்டியதுதான் டெல்லி ஜாமிஆ மாணவர்களின் அமைதி பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்த வழிவகுத்தது. ஆகவே, நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலையைப் பாதுகாக்கும் பொருட்டு, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் பாஜக எம்.பி. ப்ரவேஷ் வர்மா ஆகியோரை தாமதிக்காமல் கைது செய்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும். டெல்லி ஜாமிஆ பல்கலைக்கழக மாணவர்கள் மீதான துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : shootings ,SDPI Party ,Tamil Nadu ,announcement ,party , Students, shooting, denouncing, protesting throughout Tamil Nadu Party
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...