×

டூ வீலர் ஏற்றுமதியில் ஹோண்டா சாதனை: 25 லட்சத்தை தாண்டியது

சென்னை: ஹோண்டா நிறுவனம் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட டூவீலர்களை ஏற்றுமதி செய்து புதிய சாதனை படைத்துள்ளது.ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம், தனது முதல் மாடலான ஆக்டிவாவுடன் 2001ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியை தொடங்கியது. கடந்த 2015ல் ஒட்டுமொத்த ஏற்றுமதி 10 லட்சத்தை தாண்டியது. பல ஆண்டுகளாக விரைவான தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட இந்த நிறுவனத்துக்கு ஜப்பானில் உள்ள ஹோண்டா மோட்டார்ஸ் கூடுதல் ஏற்றுமதி ஒதுக்கீடு  வழங்கியது.
இந்த நிறுவனம் அடுத்த 15 லட்சம் யூனிட் எண்ணிக்கையை 5 ஆண்டுகளிலேயே எட்டி சாதனை படைத்திருக்கிறது. இது, அதன் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் முந்தைய வேகத்தை விட 2 மடங்கு அதிகமாகும்.இதுகுறித்து ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவன விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு மூத்த துணைத் தலைவர் யத்வீந்தர் சிங் குலேரியா கூறுகையில், “ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை, ஹோண்டா  நிறுவனம், ஏற்றுமதி மூலம் 25 லட்சம் இருசக்கர வாகன வாடிக்கையாளர்களை மகிழ்வித்துள்ளது.

இந்தியாவில் அதிக அளவில் ஸ்கூட்டர் ஏற்றுமதி செய்பவராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த 2020-ம் ஆண்டில், ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் உலகளாவிய மோட்டார் சைக்கிள் வணிகத்தில் அதன் முதன்மை  நிலையை மேலும் பலப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது” என்றார்.இந்த நிறுவன ஏற்றுமதியில் ஹோண்டா டியோ முன்னிலையில் உள்ளது. 2001ல் ஒரே ஒரு மாடலில் இருந்த ஏற்றுமதி தற்போது 18 மாடல்களாக உயர்ந்துள்ளது. ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள  26 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Tags : Honda , Honda, record, two-wheeler ,exports:
× RELATED ராயபுரம் பகுதியில் உரிய ஆவணமில்லாத 60...