×

சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளபோதிலும் திறந்த நிலையில் கல்குவாரி குட்டைகள்

* உயிரிழப்பால் மாசடையும் தண்ணீர்  * தடுப்பு அமைக்க மக்கள் கோரிக்கை

குன்றத்தூர்: சென்னைக்கு குடிநீர் வழங்கும் கல்குவாரி குட்டைகள் திறந்த நிலையில் உள்ளதால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. சென்னை புறநகர் பகுதியான மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் பகுதியில் அரசுக்கு சொந்தமான 175 ஏக்கர் பரப்பளவில், 25 கல்குவாரி குட்டைகள் அமைந்துள்ளன. ஒரு காலத்தில் சிறந்த கல்குவாரிகளாக இருந்து அரசுக்கு பெருமளவு இலாபம்  ஈட்டித் தந்த நிலையில் தற்போது அவற்றில் தேங்கி நிற்கும் மழைநீர் மூலம் கோடை காலத்தில் ஒட்டுமொத்த சென்னை மக்களின் தாகம் தீர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த கல்குவாரி குட்டைகள் திறந்த நிலையில் உள்ளதால் இவற்றில் ஏராளமானோர் இறங்கி குளிப்பது வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு குளிக்கும்போது பலர் தங்களை அறியாமல் தண்ணீரில் மூழ்கி பலியாகும் சம்பவங்களும்  நாளுக்கு நாள்  அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க அரசு, இதுவரை எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.எனவே செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் போன்று சென்னைக்கு குடிநீர் வழங்கி வரும் ஏரிகளை பாதுகாக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை போன்று இதுபோன்ற கல்குவாரி குட்டைகளையும் பாதுகாத்து சுத்தமான மற்றும் சுகாதாரமான  குடிநீர் சென்னை மக்களுக்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘சிக்கராயபுரம் கல்குவாரி குட்டைகளின் பயன்பாடுகள் தற்போது அதிகரித்துள்ளது. எனவே பெருகி வரும் உயிரிழப்புகளை தடுக்க, சிக்கராயபுரம் கல்குவாரி பகுதிகளை சுற்றிலும் பாதுகாப்பாக தடுப்பு  வேலிகள் நிரந்தரமாக அமைக்க வேண்டும். மேலும் பாதுகாக்கப்பட்ட இடமாக அரசு அறிவிக்க வேண்டும். சிசிடிவி கேமரா அமைத்து, 24 மணி நேரமும் குட்டைகளை அரசு கண்காணிக்க வேண்டும். வெளியூர் நபர்கள் அத்துமீறி கல்குவாரி குட்டை பகுதியில் நுழைவது தடுக்கப்பட  வேண்டும். மேலும் கல்குவாரி குட்டை நீரின் அவசியம் குறித்தும், பாதுகாக்க வேண்டியதில் பொதுமக்களின் பங்களிப்பு குறித்தும் விளம்பர பதாகைகள் வைக்க வேண்டும். மேலும் இரவு நேரங்களிலும் எளிதில் அடையாளம் காணும் வகையில், சிக்கராயபுரம் கல்குவாரியை சுற்றி உள்ள பகுதிகளில், சிவப்பு நிறத்தில் ஆபத்தான பகுதி என்பதை குறிக்கும் வகையில், எச்சரிக்கை மின் விளக்குகள் அமைக்கப்பட  வேண்டும். மேலும் கல்குட்டை பகுதியை சுற்றிலும் மது அருந்த நிரந்தர தடை விதிக்க வேண்டும்’’ என்றனர்.

Tags : Kalkwari ,Chennai ,Madras ,Calvary , drinking water, Calvary cubs, open
× RELATED விவிபேட் சீட்டு வழக்கு: விசாரணைக்கு ஏற்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு