×

ரூயா அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு வந்த குடும்பத்தினர் திடீர் மாயம்: திருப்பதியில் பரபரப்பு

திருப்பதி: திருப்பதி ரூயா அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம், பீலேர் பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சீனாவில் வசித்து வந்தனர். அவர்கள் கடந்த மாதம் 18ம் தேதி சீனாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்தனர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக அவர்கள்  அனைவரும், தங்களை  பரிசோதித்துக் கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் 3 வயது குழந்தை, பெண் மற்றும் 2 ஆண்கள் என 4 பேர் திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு வந்தனர். இதுகுறித்து மருத்துவமனை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, மருத்துவக் குழுவினர்  மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள தனி வார்டில் காத்திருந்தனர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும், அவர்கள் பரிசோதனை செய்ய  வரவில்லை. அவர்களை தேடியபோது 4 பேரையும் காணவில்லை.

இதுகுறித்து டாக்டர்கள் விசாரித்தபோது, கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள வந்தவர்கள் மருத்துவமனையில் காத்திருந்தபோது, யாரோ சிலர், கொரோனா அறிகுறிகள் இருந்தால் 2 வாரத்திற்கு மருத்துவமனையில் தனியாக  தங்க வேண்டும் என பேசிக் கொண்டதாகவும், இதனால் பரிசோதனைக்கு வந்த 4 பேரும் அச்சமடைந்து, டிபன் சாப்பிட்டுவிட்டு வருவதாக கூறி வெளியில்  சென்றவர்கள் மீண்டும் திரும்பி வரவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து  அவர்களை தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது. திருப்பதி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வந்த 4 பேர் திடீரென மாயமான சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Families ,examination ,Ruia Government Hospital , Ruia, Government Hospital, corona testing, Thripatti
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...