×

இந்தியாவுடன் டி20 ஓயிட்வாஷ் ஆனது நியூசிலாந்து

மவுன்ட் மங்கானுயி:நியூசிலாந்து அணியுடனான தொடரை வென்று சாதனை படைத்துள்ளதுடன் 5வது டி20 போட்டியிலும் வென்று  இந்தியா அந்த அணியை ஓயிட்வாஷ் செய்து சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா நேற்று கடைசி மற்றும் 5வது டி20 போட்டியில் விளையாடியது. ஏற்கனவே  தொடரை 4-0 என்ற கணக்கில் வென்று விட்ட இந்தியா உற்சாகத்துடன் களம் கண்டது.இந்திய அணியில் கேப்டன் விராட் கோஹ்லிக்கு ஓய்வு தரப்பட  ரோகித் சர்மா கேப்டனாக நேற்று களம் கண்டார்.  அணியில் வேறு மாற்றம் இல்லை. நியூசிலாந்து அணி 4வது போட்டியில் களம் கண்ட அதே அணி  டிம் சவுத்தீ தலைமையில்  களம் கண்டது.டாஸ் வென்ற இந்திய அணி முதலில் களம் கண்டது.  தொடக்க ஆட்டக்காரர்களாக  லோகேஷ் ராகுல், சஞ்சு சாம்சன்  களமிறங்கினார். சஞ்சு சாம்சன் நேற்றும் ஆட்டத்தின் 2வது ஓவரை வீசிய குகலெஜினின்  3வது பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு களம் கண்ட கேப்டன்  ரோகித் சர்மா-ராகுல் இணை பொறுப்பாக விளையாடியது. அதற்கு சோதனையாக ராகுல்  45ரன்(33பந்து 4பவுண்டரி, 2சிக்சர்) எடுத்திருந்தபோது பென்னட் பந்து வீச்சில் சான்ட்னரிடம் கேட்ச் கொடுத்து  வெளியேறினார்.ராகுல் வெளியேறிய பிறகு 35பந்துகளில் அரைசதம் விளாசினார் ரோகித் சர்மா.   பிறகு  ரோகித்  17வது ஓவரில் ஒரு சிக்சர் விளாசினார். அப்போது காலில் தசைபிடிப்பு ஏற்பட்டது. அடுத்து 2 பந்துகளை சமாளித்து விளையாடியவர், முடியாமல்  ஒய்வுக்காக வெளியேறினார். அப்போது அவர் 60 ரன்(41பந்து, 3பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்திருந்தார்.

அதன்பிறகு ஸ்ரேயாஸ் அய்யருடன் இணை சேர்ந்து 5 ரன் எடுத்த ஷிவம் துபேவை 19வது ஓவரில் வெளியேற்றினார் குகலெஜின். அதன்பிறகு வந்த மணீஷ் பாண்டே 4 பந்தில் 11 ரன்(1 பவுண்டரி, 1 சிக்சர்), ஸ்ரேயாஸ் அய்யர் 31பந்தில் 33 ரன்(1  பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து களத்தில் இருக்க இந்தியா 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன் எடுத்தது.நியூசிலாந்து தரப்பில் ஸ்காட் குகலெஜின் 2, ஹமிஷ் பென்னட் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.அதனையடுத்து 164ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் கண்டது. ரோகித் தொடர்ந்து ஓய்வில் இருக்க ராகுல் கேப்டன் பொறுப்பை  கவனித்தார். வழக்கத்துக்கு மாறாக முதல் ஓவரை வாஷிங்டன் சுந்தர், 2வது ஓவரை பும்ராவும் வீசினர். ஆட்டத்தின் 2வது ஓவரில் பும்ராவின் பந்து வீச்சில் கப்தில் 2,  3வது ஓவரில் வாஷிங்டன் பந்துவீச்சில்  மன்றோ 15ரன்(2பவுண்டரி, 1சிக்சர்) வெளியேறினர்.  அடுத்து வந்த டாம் புரூசை அருமையாக ரன் அவுட்  செய்தார் ராகுல்.அதனால் நியூசிலாந்து 3.2ஓவரில் 3விக்கெட்களை இழந்து 17 ரன்னுடன் தடுமாறியது. ஆனால் அடுத்து இணை சேர்ந்த டிம் செய்பெர்ட்-ராஸ் டெய்லர் இணை  பவுண்டரிகளுடன், சிக்சர்களும் விளாசி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். அதிலும் 10 ஓவரை வீசிய ஷிவம் துபே பந்துகளை 4 சிக்சர், 2 பவுண்டரிகள் உட்பட 34  ரன் குவித்து அசத்தினர்.

இந்த போட்டியிலும்  அரை சதம் விளாசிய  செய்பெர்ட்  ைசனி பந்து வீச்சில் வீழ்ந்த போது 50ரன்(30பந்து, 5பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்திருந்தார்.  அதுவரை நியூசிலாந்து பக்கம் இருந்த ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது.அதன்பிறகு டாரில் மிட்செல் 2, மிட்செல் சான்ட்னர் 6, ஸ்காட் குகலெஜின் என வெளியறேினாலும் ராஸ் டெய்லர் நிதானமாக விளையாடினார். அவர் 42 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். ஆனால் அடுத்த 3 ரன்களை சேர்த்ததும் அவரை  சைனி வெளியேற்றினார். தொடர்ந்து டிம் சவுத்தி 6 ரன்னில் வெளியேறியபோது நியூசிலாந்து 18.2 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 141ரன் எடுத்திருந்தது.ஆட்டம் முடியப்போகுது என்று நினைத்திருந்த நிலையில் ஈஷ் சோதி கடைசிநேரத்தில் அதிரடி காட்டி 10 பந்துகளில் 16* ரன் குவித்தார். ஆனாலும் நியூசிலாந்து 20ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன் மட்டுமே எடுத்து 7 ரன்  வித்தியாசத்தில் தோற்றது.இந்த டி20 தொடரில் 5 போட்டிகளிலும் தோற்ற நியூசிலாந்து இந்தியாவிடம் ஒயிட்வாஷ் ஆனது.
அதுமட்டுமின்றி நியூசிலாந்தில் முதல்முறையாக டி20 தொடரை கைப்பற்றி இந்தியா சாதனை படைத்துள்ளது.

ஆட்ட நாயகன் பும்ரா
இந்தியாவின்  பும்ரா  4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உட்பட 12 ரன் மட்டுமே விட்டுக்  கொடுத்து  3விக்கெட்களை வீழ்த்திய பும்ரா ஆட்ட நாயகனாக தேர்வு  செய்யப்பட்டார்.  நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர்  தலா 2, வாஷிங்டன் சுந்தர்  ஒரு  விக்கெட்டை வீழத்தினர்.

தொடர் நாயகன் ராகுல்
இந்த டி20  தொடரில் அதிக ரன் குவித்த லோகேஷ் ராகுல் தொடர் நாயகனாக தேர்வு  செய்யப்பட்டார். அவர் 5 போட்டிகளில்  விளையாடி 2 அரைசதம் உட்பட  224ரன்  குவித்துள்ளார். நியூசிலாந்து கோலின் மன்றோ 4 போட்டிகளில்  விளையாடி 163 ரன்  குவித்து பட்டியலில் 2வது இடத்திலும், கேன் வில்லியம்சன் 3 போட்டிகளில்  விளையாடி 160ரன் குவித்து 3வது இடத்திலும் உள்ளனர்.

கோஹ்லியை முந்திய ரோகித்
ரோகித் சர்மா தனது 108வது  டி20 போட்டியில் நேற்று 21வது அரைசதத்தை ரோகித் விளாசினார். மேலும் டி20  போட்டிகளில் அவர் அடித்த 4 சதங்களையும் கணக்கில் சேர்த்தால் அவர் 25 அரை  சதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற  சாதனையை நேற்று அவர் நிகழ்த்தினார். இந்திய  கேப்டன் விராட் கோஹ்லி டி20 போட்டியில் மொத்தம் 24 அரை சதங்களை  விளாசியுள்ளார்.

ராஸ் டெய்லர் 100
100 டி20 போட்டிகளில்  விளையாடிய 3வது நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை ராஸ் டெய்லர்  பெற்றுள்ளார். நியூசிலாந்தின் வீராங்கனை சூசி பேட்ஸ் 103 போட்டிகளில்  விளையாடி முதல் இடத்தில் இருக்கிறார்.

ஒரே நாளில் 3 கேப்டன்கள்
கேப்டன் விராட் கோஹ்லிக்கு நேற்று ஓய்வு தரப்பட ரோகித் சர்மா கேப்டனாக களம் கண்டார். ஆனால் கால் வலி காரணமாக வெளியேற 2வது பாதியில் லோகேஷ் ராகுல் கேப்டன் பொறுப்பை கவனித்தார். போட்டி முடிந்ததும் தொடரை  கைப்பற்றியதற்கான கோப்பையை விராட் வாங்கினார்.

Tags : New Zealand ,India , T20 ,India, Whitewash, New Zealand
× RELATED இங்கிலாந்து செல்லும் விமானம் ரத்து;...