×

எல்ஐசி நிறுவன பங்குகள் 2ம் காலாண்டில் விற்பனை: நிதித்துறை செயலாளர் தகவல்

புதுடெல்லி: எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் வரும் நிதியாண்டின் 2ம் காலாண்டில் விற்பனைக்காக வெளியிடப்படும் என, மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் நேற்று தெரிவித்தார். பொதுத்துறை நிறுவனத்தில் உள்ள பங்குகளை விற்று நிதி திரட்டுவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த வகையில் பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா நிறுவன பங்குகளை முழுமையாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.  இதன் தொடர்ச்சியாக, எல்ஐசி மற்றும் ஐடிபிஐ வங்கியில் அரசிடம் உள்ள பங்குகள் விற்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் நேற்று அளித்த  பேட்டியில் கூறியதாவது: எல்ஐசி பங்குகளை விற்பனை செய்வதில் ஏராளமான நடைமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது. இதற்காக சட்டங்களிலும் மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. இது தொடர்பாக சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனைகள் நடத்தப்படும்.  பட்ஜெட்டில் அறிவித்தபடி இதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. இருப்பினும், பல்வேறு கட்ட நடைமுறைகள் இருப்பதால், வரும் நிதியாண்டின் 2ம் காலாண்டில்தான் எல்ஐசியின் ஐபிஓ பங்குகளை விற்க பங்குச்சந்தையில் பட்டியலிட முடியும். இவ்வாறு ராஜீவ் குமார் கூறினார்.

Tags : LIC Company, Quarterly, Financial Secretary ,Information
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...