×

சபரிமலை தொடர்பான அனைத்து வழக்குகளும் உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வு முன்பாக நாளை விசாரணை

புதுடெல்லி: சபரிமலை உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்குப் பாகுபாடு காட்டப்படுவதற்கு எதிரான வழக்கை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நாளை மீண்டும் விசாரிக்கிறது. கேரள மாநிலம் சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்று கடந்த 2018 செப்டம்பர் 28ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை மறு ஆய்வு செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில்  65 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, 7 நீதிபதிகள் அமர்வுக்கு வழக்கை மாற்றி கடந்த ஆண்டு நவ. 14ம் தேதி தீர்ப்பு வழங்கியது. தொடர்ந்து சபரிமலை வழக்கை 9 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்றும் ஜன. 13ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என்றும் உச்சநீதிமன்றம் சமீபத்தில் அறிவித்தது.

இதன்படி தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பானுமதி, அசோக் பூஷண், நாகேஸ்வர ராவ், சந்தானகவுடர், எஸ்.ஏ.நசீர், சுபாஷ் ரெட்டி, கவாய், சூரிய காந்த் ஆகியோர் அடங்கிய 9 நீதிபதிகள் அமர்வு முன்பு கடந்த ஜன. 13ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, இந்த வழக்கில் மனுத்தாக்கல் செய்துள்ள 4 மூத்த வழக்கறிஞர்கள் மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்குக் காட்டப்படும் பாகுபாடு, சபரிமலை விவகாரம் ஆகியவை குறித்த பிரச்னைகளை ஒன்றுகூடி பேசி தங்களிடம் தெரிவிக்க அறிவுறுத்தியது.

தொடர்ந்து தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது, ‘இந்த வழக்கு தொடர்பாக சட்டச் சிக்கல்கள், பிரச்னைகளைக் கருத்தொற்றுமையுடன் ஆய்வு செய்து கூறுங்கள்’ என்று மூத்த வழக்கறிஞர்களிடம் தெரிவித்தது. ஆனால், கருத்தொற்றுமை வராதது எங்களுக்கு வேதனையளிக்கிறது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.  இருப்பினும் இந்த வழக்கில் வாதிடும் மற்ற சில வழக்கறிஞர்கள் சில கேள்விகளை முன்வைத்தனர். அதைக் கருத்தில் எடுத்துக் கொண்டு பிப். 3ம் தேதி (நாளை) 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அப்போது இந்த வழக்குத் தொடர்பான பிரச்னைகளை, சிக்கல்களை நீதிபதிகளே முடிவு செய்வார்கள். அதன்பின் விசாரணை எப்போது இருந்து தொடங்கும் என்று அறிவிக்க வாய்ப்புள்ளது.

Tags : Sabarimala ,9th Supreme Court Sessions , Superior Court, Case, Supreme Court, Judges, Inquiry
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு