×

பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சிக்கு எந்திரமாக விளங்கும் மராட்டியத்துக்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளது: உத்தவ் தாக்கரே

மும்பை: மத்திய பட்ஜெட்டில் மராட்டியத்திற்கு அநீதி இழைக்கப்பட்டு உள்ளதாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டி உள்ளார். மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து உள்ள மத்திய பட்ஜெட் யதார்த்தத்தில் இருந்து வெகுதொலைவில் இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் நாட்டின் வளர்ச்சிக்கு எந்திரமாக விளங்கும் மராட்டியத்துக்கும், மும்பைக்கும் அநீதி இழைக்கப்பட்டு உள்ளது. மராட்டியத்துக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் அடிப்படை வசதிகள் மற்றும் மெட்ரோ ரெயில் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளன.

மும்பை புறநகர் ரெயில் வழித்தடங்களை மேம்படுத்துவதற்கான எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.
குஜராத்தில் உள்ள சர்வதேச நிதி மையம் பலப்படுத்தப்பட்டு உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு உன்னத பங்களிப்பை அளித்து வரும் மும்பை வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மராட்டியத்தை மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்டது பட்ஜெட்டில் தெளிவாகி உள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஜி.எஸ்.டி.யால் பாதிக்கப்படுகின்றன. மக்களின் வாங்கும் திறன் குறைந்துள்ளது. வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : country ,Maratha ,Uthav Thackeray ,growth , Budget, Growth of the Country, Maratha, Injustice, Uthav Thackeray
× RELATED நாடு முழுவதும் வங்கிகள், ஏ.டி.எம்.கள்...