×

கொரோனா வைரஸ் எதிரொலி: சீனா சென்று வந்தவர்களுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில் நுழைய தடை

வாஷிங்டன்: கொரோனா வைரஸ் எதிரொலியாக அந்த நாட்டுக்கு சென்று வந்தவர்களுக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியாவில்  நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இதன் தாக்குதலில் பாதிக்கப்படுவோர் மற்றும் பலியாவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகின்றது. கொரோனா வைரஸ் பாதிப்பினால் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வைரஸ் பாதிப்பை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சீனாவை தவிர இந்தியா உள்ளிட்ட 18 நாடுகளில் 98 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், உயிரிழப்புகள் இல்லை. கொரோனா எவ்வாறு பரவுகிறது, எவ்வாறு அதிகமாகிறது என்பது குறித்து விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சி மேற் கொண்டுள்ளனர். இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, கனடா, தென்கொரியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்காவையே பதற வைத்துள்ளது. சீனாவுக்கு கடந்த 2 வாரங்களில் சென்று வந்த பிற நாட்டினர் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து அமெரிக்க சுகாதார அமைச்சர் அலெக்ஸ் அசார் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், சீனாவின் ஹூபெய் மாகாணத்துக்கு போய் விட்டு தாய்நாடு திரும்புகிற அமெரிக்கர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள்; சீனாவின் பிற பகுதிகளுக்கு சென்று விட்டு வருகிற அமெரிக்கர்கள் 2 வாரம் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அலெக்ஸ் அசார்; உலக சுகாதார அமைப்பின் முடிவை அடுத்து அமெரிக்காவிலும் பொது சுகாதார அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். அமெரிக்காவைப்போன்று ஆஸ்திரேலியாவும் அதிரடியில் இறங்கியது. சீனா போய் விட்டு வருகிற பிற நாட்டினர் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டினர் சீனா போய் வந்தால், அவர்கள் 2 வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவார்கள் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் அறிவித்துள்ளார்.

Tags : China ,US ,Corona ,Australia , Coronavirus, China, USA, Australia, Prohibition
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...