×

ஆத்திச்சூடி, திருக்குறளை மேற்கோள் காட்டிய அமைச்சர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தனது பட்ஜெட் உரையில் காஷ்மீரி மொழியில் கவிதை ஒன்றை வாசித்தார். ‘‘இந்தியா ஷாலிமார் பூங்காவை போன்றது. தால் ஏரி தாமரை போன்றது. உலகத்திலேயே சிறந்த நாடு இந்தியா’’ என அவர் குறிப்பிட்டார். இதேபோல், வேளாண் குறித்து பேசுகையில் “பூமி திருத்தி உண்” என்ற ஒளவையாரின் ஆத்திச்சூடி பாடலை சுட்டிக்காட்டி பேசினார். 3000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெண் கவிஞரான ஒளவையார், வேளாண்மை பற்றி மூன்றே வார்த்தையில் போதனைகள் வழங்கியதாகவும் அவர் புகழ்ந்து பேசினார்.

“பூமி திருத்தி உண்” என்ற ஆத்திச்சூடி பாடலுக்கு ‘’நிலத்தை உழுது அதில் பயிர் செய்து உண்’’ என்பது பொருள். இதனை முக்கிய நோக்கமாக கொண்டு மோடி அரசு செயல்படுவதாகவும் நிர்மலா கூறினார். இதேபோல், மத்திய பட்ஜெட் வாசிக்கும்போது நிர்மலா சீதாராமன் திருக்குறள் ஒன்றை வாசித்தார். ‘‘பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து’’ என்ற திருக்குறளை வாசித்து நோயில்லாமல் இருத்தல், செல்வம், விளைபொருள், வளம், இன்ப வாழ்வு, நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றில் பிரதமர் மோடி அதிக கவனம் செலுத்துகிறார் என்று நிர்மலா சீதாராமன் கூறும்போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியை ஏற்படுத்தினர்.

* பாதியில் கைவிட்டார்
நாடாளுமன்றத்தில் காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ெஜட் அறிக்கையை வாசிக்க தொடங்கினார். பிற்பகல் 1.40 வரை அவர் பட்ஜெட் உரையை வாசித்த நிலையில் உடல் சோர்வு ஏற்பட்டது. அவரால் வார்த்தைகளை தெளிவாகவும், அழுத்தமாகவும் உச்சரிக்க முடியாமல் சோர்ந்தார். பட்ஜெட் 2 பக்கங்கள் மட்டுமே இருந்த நிலையில், அவரது உடலும், குரலும் ஒத்துழைக்கவில்லை. இதனால், பட்ஜெட் உரையை மக்களவையில் சமர்ப்பித்து விட்டதாக கூறி அமர்ந்தார்.

* தமிழுக்கு எதுவுமில்லை: தயாநிதி மாறன் ஆவேசம்
பட்ஜெட் உரையில் ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிக் கொண்டிருக்கும் போது குறுக்கிட்ட திமுக உறுப்பினர் தயாநிதி மாறன், ‘‘ஜனாதிபதி உரையாற்றும் போது திருக்குறளைப் பற்றி குறிப்பிடுகிறார், பிரதமர் உரையாற்றும் போது திருக்குறளைப் பற்றி குறிப்பிடுகிறார், ஆனால், தமிழ் மொழிக்கு எதையும் நீங்கள் செய்வதில்லை, தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கவும் எந்தவொரு முயற்சியையும் எடுப்பதில்லை,’’ என பட்ஜெட் உரைக்கு இடையே ஆவேசமாக கூறினார்.

Tags : Athichudy ,Minister , Attichudy, Thirukkural, quoted, Minister
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...