×

முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து நாட்டு மக்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் பட்ஜெட்

சென்னை: மத்திய அரசின் பட்ஜெட் நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள 2020-21ம் ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ததற்காக மத்திய நிதியமைச்சரை நான் பாராட்டுகிறேன். இந்த நிதி நிலை அறிக்கை உள்கட்டமைப்பு, விவசாயம், பாசன வசதி மற்றும் ஊரக வளர்ச்சி மேம்பாட்டை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளதை  நான் வரவேற்கிறேன்.

அருங்காட்சியக திட்டத்தில் கீழடியையும் சேர்க்கும்படி நான் கேட்டுக் கொள்கிறேன். தொழில்நுட்ப ஜவுளி வகைகள் உற்பத்தியை தரம் உயர்த்திட 1,480 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துறையில் சிறந்து விளங்கும் சென்னை, திருப்பூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள உற்பத்தி நிறுவனங்களை சர்வதேசத் தரத்திற்கு இந்த நிதியுதவியால் உயர்த்திட முடியும். நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிச் சலுகை அளிக்கும் வகையிலும், வரி முறையை எளிமையாக்கும் நோக்கத்தோடும் இந்த நிதிநிலை அறிக்கையில் தனிநபர் வருமான வரி முறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது இப்பிரிவினருக்கு நிவாரணம் அளித்து, பொருள் நுகர்வை உயர்த்தும் என எதிர்பார்க்கிறேன்.

சென்னை-பெங்களூரு விரைவுவழிச் சாலை விரைவில் அமைக்கப்படும் என அறிவித்திருப்பதற்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.  தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் 6,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு நெடுஞ்சாலைப் பகுதிகளை 2024ம் ஆண்டிற்குள் உருவாக்க ஒரு திட்டம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் நிதிநிலை அறிக்கையில் புதியதாக நூறு விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நெய்வேலி, ஓசூர், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் விமான நிலையங்கள் அமைக்கவும், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்கும் உரிய நிதி ஒதுக்கிடவும் கேட்டுக்
கொள்கிறேன். மக்கள் மீது வரிச்சுமையை ஏற்றாமல் பல்வேறு தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய வகையில், இந்த நிதிநிலை அறிக்கை திறம்பட தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு அறிவிப்புகள், மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்வதோடு மட்டுமன்றி, எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அமைந்துள்ளன. இந்த நிதிநிலை அறிக்கையை அளித்திட்ட மத்திய நிதியமைச்சருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags : Edappadi Palanisamy ,nation , Chief Minister Edappadi Palanisamy, Concept, Folk, Future, Enrichment, Budget
× RELATED சென்னையில் ஆளுநர் பன்வாரிலாலுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு