×

தற்கொலை மிரட்டல் விடுத்ததால் நடிகை ஷனம் ஷெட்டியை பிரிந்தேன்: நடிகர் தர்ஷன் பேட்டி

சென்னை: மாடல் அழகியும், நடிகையுமான ஷனம் ஷெட்டி, தனது காதலன் நடிகர் தர்ஷன் தன்மீது பழிசுமத்தி திருமணம் செய்துகொள்ள மறுக்கிறார் என்று, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் பரபரப்பு புகார் அளித்தார். இந்நிலையில், ஷனம் ஷெட்டியின் புகார் குறித்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த தர்ஷன் கூறியதாவது: இலங்கையை சேர்ந்த நான், சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்தேன். எதிர்பார்த்த வாய்ப்பு கிடைக்காததால் விளம்பரங்களில் நடித்தேன். ஒரு விளம்பரப் படத்தில் நடித்தபோது ஷனம் ஷெட்டியின் அறிமுகம் கிடைத்தது. பிறகு அவர்  தயாரித்த தமிழ்ப் படத்தில் இணைந்து நடித்தோம். ஆனால், சில பிரச்னைகளால் படம் தடைப்பட்டதால், ஒரு டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்றேன். படத்தில் நடித்தபோது நாங்கள் காதலித்தோம். பிறகு திருமணம் செய்துகொள்வதற்காக நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்தது. இதில் ஷனம் ஷெட்டியின் உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டனர். நாங்கள் காதலிப்பதையும், நிச்சயதார்த்தம் செய்துகொண்டதையும் வெளியில் சொல்ல வேண்டாம், அது இருவருடைய சினிமா வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்று முடிவு செய்தோம்.

இந்நிலையில், ஷனம் ஷெட்டியின் நடவடிக்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. டி.வி நிகழ்ச்சியில் என்னுடன் பங்கேற்ற பெண்களுடன் பேசக்கூடாது, பழகக்கூடாது என்று உத்தரவு போட்டார். எங்கு சென்றாலும் தன்னையும் கூடவே அழைத்துச் செல்ல வேண்டும் என்று அடம்பிடித்தார். வெளிநாட்டு நிகழ்ச்சிக்கும் என்னுடன் வலுக்கட்டாயமாக வந்தார். எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைக்கும் படங்களில், தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்றார். ஒருகட்டத்தில், ஏற்கனவே நாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறி திருமணத்துக்கு வற்புறுத்தினார். ‘’எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள். அவளுக்கு திருமணம் செய்த பிறகு நாம் திருமணம் செய்துகொள்ளலாம்’’ என்று சொன்னேன். இதையடுத்து ஷனம் ஷெட்டி, தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டினார். தொடர்ந்து அவருடன் இருந்தால் என் திரையுலக வாழ்க்கை பாதிக்கப்படும் என்று உணர்ந்து, உடனே அவரை விட்டுப் பிரிந்தேன்.ஷனம் ஷெட்டி எனக்கு நிறைய உதவிகள் செய்துள்ளார்.

அதை நான் மறுக்கவில்லை. ஆனால், பண உதவி எதுவும் செய்யவில்லை. டி.வி நிகழ்ச்சியில் என்னுடன் பங்கேற்ற நடிகை ஷெரீனுடன் என்னை சம்பந்தப்படுத்தி பேசினார். ஷனம் ஷெட்டிக்கு இதற்கு முன் ஒரு காதல் இருந்துள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு விருந்து நிகழ்ச்சியில் காதலனை சந்தித்து, அவருடன் நீண்ட நேரம் செலவழித்துள்ளார். எனக்கு வாய்ப்பு தரும் படத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சென்று, எனக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறார். இதனால் பல வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை. ஷனம் ஷெட்டியால் அதிக மன உளைச்சலுக்கு ஆளானேன். ‘’இன்னொரு நாட்டில் இருந்து பிழைக்க வந்த நீ, என்னை ஏமாற்ற பார்க்கிறாயா? என் உறவினர்கள் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள். உன்னை வளர விட மாட்டேன்’’ என்று சொல்லி என்னை மிரட்டுகிறார். ஷனம் ஷெட்டி செய்த உதவிகளுக்காக, அவருக்கு எதிராக நான் புகார் கொடுப்பதோ அல்லது வழக்கு போடுவதோ செய்ய மாட்டேன். அவர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினால், என்னிடம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் கொடுப்பேன். இவ்வாறு தர்ஷன் கூறினார்.

Tags : Darshan ,Shanam Shetty ,suicide , Suicide threat, actress Shanam Shetty, split, actor Darshan, interview
× RELATED தர்ஷன், அஞ்சு குரியன் நடித்த எண்ட ஓமனே