×

விவேகானந்தர் மையங்களில் மன்னர் பாஸ்கர சேதுபதி படம் இடம்பெறச் செய்ய வேண்டும்: பிரதமருக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: விவேகானந்தர் மையங்களில் மன்னர் பாஸ்கர சேதுபதி படம் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு வைகோ வலியுறுத்தியுள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:
1893ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடந்த உலக சமயங்களின் மாநாட்டில் விவேகானந்தர் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில் விவேகானந்தருக்கு உரையாற்றுகின்ற உயர்ந்த வாய்ப்பை வழங்கிய பெருமை ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி அவர்களையேச் சாரும். ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி தமிழ், ஆங்கிலப் புலமையும், ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவரும் ஆவார். எனவேதான் மன்னர் பாஸ்கர சேதுபதிக்கு உலக சமய மாநாட்டில் பங்கேற்க அழைப்பு வந்தது.

அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாட்டில் பங்கேற்க தமக்கு வந்த வாய்ப்பை ஏற்றுக்கொள்ளாமல், தம்மைவிட விவேகானந்தர் சென்று உரையாற்றினால் நாட்டுக்கும், உலகுக்கும் பயன் விளையும் என மன்னர் பாஸ்கர சேதுபதி கருதினார்.எனவே விவேகானந்தரை சிகாகோ மாநாட்டுக்கு அனுப்பி வைத்து, அவரின் எழுச்சிமிக்கச் சொற்பொழிவு இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் கீர்த்தி பெற செய்தவர் மன்னர் பாஸ்கர சேதுபதி ஆவார். விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் பேசிய 125வது ஆண்டு நிறைவையொட்டி 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வெளிநாடுகளில் இந்திய தூதரகம் வழியாக நடத்தப்படும் கலாச்சார மையங்கள் அனைத்தும் விவேகானந்தர் மையங்களாக பெயர் மாற்றப்பட்டது. அந்த மையங்களில், விவேகானந்தர் பெருமை பெற்றதற்குக் காரணமாக இருந்த ராமராதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் திருஉருவப் படத்தையும் இடம்பெறச் செய்ய பிரதமர் நரேந்திர மோடி  முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Bhaskara Sethupathi ,Vaiko ,centers ,Vivekananda ,Vivekananda Centers , Vivekananda Center, King Bhaskara Sethupathi, Film, Featured, Prime Minister, Vaiko, Emphasis
× RELATED மலர்ந்திருக்கும் இந்தச் சித்திரை,...